தீக்கிரையான கப்பலின் சிதைவுகள் கரையொதுங்கின!

Wednesday, May 26th, 2021

கொழும்பு துறைமுகத்தை அண்மித்து நங்கூரமிடப்பட்டிருந்த நிலையில், தீப்பற்றியிருந்த எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலிலில் இருந்து கடலில் வீழ்ந்த சில கொள்கலன்கள் மற்றும் எரியுண்ட கப்பலின் சிதைவுகள் என்பன நீர்கொழும்பை அண்மித்த கடற்கரைகளில் கரையொதுங்கியுள்ளன.

ஜாஎல, கபுகொட, சேத்துபாடுவ ஆகிய கடற்கரைகளில் கரையொதுங்கியுள்ளன.

வத்தளை, ப்ரீதிபுர கடற்கரையிலிருந்து நீர்கொழும்பு கடற்கரை வரையிலான கடற்பகுதியில் சுமார் 9 கிலோமீற்றர் தூரத்துக்கு இந்த சிதைவுகள் பரவியுள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

தீக்கிரையான கொள்லன் மற்றும் வெவ்வேறு அளவுகளிலான பாகங்களும் இவற்றில் உள்ளடங்குகின்றன. தற்போது பிரதேசவாசிகளின் உதவியுடன் இந்த பாகங்களை பாதுகாப்பு பிரிவினர் அகற்றி வருகின்றனர்.

இதேவேளை, இரசாயன திரவியங்களை தாங்கியவாறு பயணித்த சிங்கப்பூருக்கு சொந்தமான எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் கடந்த 20 ஆம்திகதி கொழும்பு துறைமுகத்துக்குள் பிரவேசிப்பதற்கு 9.5 கடல்மைல் தொலைவில் நங்கூரமிடப்படிருந்தபோது தீப்பற்றியது.

அதன்பின்னர், துறைமுக அதிகாரசபை, கடற்படையினர் மற்றும் விமானப்படையினர் இணைந்து இந்த தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருந்தனர்.

எனினும், கடலில் நிலவிய பலத்த காற்றுடனான காலநிலை காரணமாக, நேற்றுக்காலை மீண்டும் அக்கப்பல் மீண்டும் தீப்பற்றியதுடன் அதிலிருந்த இரசாயனம் காரணமாக வெடிப்பும் ஏற்பட்டது.

இதனையடுத்து 8 கொள்கலன்கள் கடலில் வீழ்ந்திருந்தன.  இவ்வாறு வீழ்ந்திருந்த கொள்கலன்களில் அபாயகர நச்சு இரசாயனங்கள் இருக்கலாம் என கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை நேற்று அறிவித்திருந்தது.

இந்நிலையில் EX-PRESS PEARL கப்பலில் பரவிய தீ, கப்பல் முழுதும் பரவியுள்ளதாக கடல் மாசுறுல் தடுப்பு அதிகார சபையின் தலைவர் தர்ஷனி லஹந்தபுர தெரிவித்துள்ளார்.

இதனிடையே, குறித்த கப்பலிலுள்ள கொள்கல்களில் இருந்து இரசாயனப் பொருட்கள் அல்லது எண்ணெய் கசிவு ஏற்பட்டதா என்பது தொடர்பில், நாரா நிறுவனம் விசேட ஆய்வுகளை ஆரம்பித்துள்ளது. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவனந்தா நாரா நிறுவனத்தினருக்கு விடுத்திருந்த அறிவுறுத்தலுக்கு அமைவாக விசேட குழுவொன்று ஆய்வு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக  நாரா நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: