திருப்பதி கோவிலில் விஐபி தரிசனங்கள் இரத்து!

Saturday, July 20th, 2019

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வி.ஐ.பி. தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் வி.சுப்பாரெட்டி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:- ஆந்திர மாநில முதல்-மந்திரி எஸ். ஜெகன்மோகன் ரெட்டி அறிவுரையின் பேரில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தற்போது நடைமுறையில் உள்ள வி.ஐ.பி. தரிசனத்தில் எல்-1, எல்-2, எல்-3 ஆகிய தரிசனங்களை முற்றிலும் ரத்து செய்ய, திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலரிடம் ஆலோசனை நடத்தி உத்தரவிட்டுள்ளேன்.

இந்த நடைமுறை நேற்றுமுதல் நடைமுறைக்கு வருகிறது. கோவிலில் சாதாரண பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முக்கியத்துவம் தரப்படும். கூடுதல் நேரமும் ஒதுக்கப்படும்.

புரோட்டோக்கால் அடிப்படையில் வி.ஐ.பி. தரிசனம் இரு முறையில் செயல்படுத்தப்பட உள்ளது. இதுதொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறோம். வி.ஐ.பி. தரிசனம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. பக்தர்களுக்குச் சேவை செய்வதற்காகவே அறங்காவலர் குழு மற்றும் அதிகாரிகள் உள்ளனர்.

இந்த விவகாரம் நீதிமன்றம் வரை செல்ல வேண்டிய அவசியம் இல்லை. கடந்த கால ஆட்சியில் இருந்தவர்கள் தங்களின் சுயலாபத்துக்காக எல்-1, எல்-2, எல்-3 என்ற தரிசன பிரிவினையை கொண்டு வந்து சாதாரண பக்தர்கள் மத்தியில் கோபத்துக்குள்ளாகி நீதிமன்றத்துக்குச் சென்றுள்ளனர்.

எனவே திருப்பதி ஏழுமலையான் கோவிலில் எல்-1, எல்-2, எல்-3 ஆகிய தரிசன நடைமுறைகள் முற்றிலும் ரத்து செய்யப்படும். ஐதராபாத்தில் திருமலை-திருப்பதி தேவஸ்தான அலுவலகம் செயல்பட்டு வந்தது. தற்போது அமராவதியில் தேவஸ்தான அலுவலகத்தை அமைக்க உத்தரவிட்டுள்ளேன். இது, எனது சொந்த வேலைக்காக அமைக்கவில்லை. பக்தர்களுக்குச் சேவை செய்வதற்காகவே ஆகும்.

அமராவதியில் வி.ஐ.பி. பக்தர்களுக்கு தரிசன டிக்கெட் வழங்கப்படும். அமராவதியில் வெங்கடாசலபதி கோவில் கட்டும் பணி நடந்து வருகிறது என  அவர் கூறினார்.