திருட்டைக் கட்டுப்படுத்த யாழ். மாநகரசபை நடவடிக்கை!

Saturday, July 29th, 2017

நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந்திருவிழாவையொட்டி திருட்டைக் கட்டுப்படுத்தும் வகையில் அதிகமான சி.சி.டிவிக் கண்காணிப்பு கெமராக்கள் யாழ். மாநகரசபையினால் ஆலயச் சுற்றாடலில் பொருத்தப்பட்டுள்ளதாக பிரதி ஆணையாளர் அ.சீராளன் தெரிவித்துள்ளார்.

நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவப் பெருந்திருவிழாவை முன்னிட்டு வழமை போன்று அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவையொட்டி பக்தர்களின் நலன் கருதி ஆலயத்திற்குப் போக்குவரத்திற்கு மேற்கொள்ளும் சாரதிகள் மாற்று வீதிகளில் பயணம் செய்ய வேண்டும்.

இதற்கான தடைகள் நேற்றுப் பிற்பகல் 12.30 மணி முதல் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. பொலிஸாரும், மாநகர சபையின் உத்தியோகத்தர்களும் இணைந்து இந்தத் தடை நிலையங்களில் கடமையாற்றி வருகின்றனர்.

ஆலயத்திற்கு வருகை தரும் அடியவர்களின் தாகம் தீர்ப்பதற்காகக் குடிநீர் வசதிகளும் ஏற்படுத்தபட்டுள்ளது. மஹோற்சவப் பெருவிழாவையொட்டி ஆலயச் சுற்றாடலில் கழிவகற்றல் செயற்பாடு மாநகரசபையால் முறையாகச் செயற்படுத்தப்பட்டுள்ளது.பிளாஸ்ரிக் பாவனை இந்த வருடம் ஆலயச் சுற்றாடலில் முற்றுமுழுதாகத் தடை செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, பிளாஸ்ரிக் தவிர்ந்த, இயற்கைக்குப் பாதிப்பில்லாத பொருட்களை மாத்திரமே ஆலயச் சுற்றாடலில் பயன்படுத்த முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: