திரிபோஷா வழங்கலை ஊக்குவிப்பதற்கு இலங்கைக்கு ஆறு இலட்சம் அமெரிக்க டொலர் நிதியுதவி!

Friday, March 19th, 2021

திரிபோஷா உற்பத்திக்கான சோளம் கொள்வனவு செய்வதற்காக இலங்கை அரசாங்கத்திற்கு ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான கொரிய நிறுவனம் ஆகியன 600,000 அமெரிக்க டொலர்கள் நிதியுதவி வழங்குகின்றன.

1.1 மில்லியன் தாய்மார் மற்றும் சிறுவர்களுக்கு வழங்கப்படும் சோளம் சார்ந்த உணவுப் பொருளான திரிபோஷாவை தயாரிப்பதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.

போஷாக்கு குறைவான சிறுவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், தாய்ப்பாலூட்டும் பெண்களுக்கு போஷாக்கினை வழங்குவதற்காக சுமார் 50 வருடங்களாக இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் திரிபோஷா நிகழ்ச்சியினை தொடர்வதற்கு இந்த உதவித்தொகை துணை புரியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் மும்மடங்கு ஊட்டச்சத்துகள் என்ற பொருள்படும் திரிபோஷா என்பது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மிகைநிரப்பு உணவு உற்பத்தியாகும்.

எடை குறைந்த அல்லது குறைந்த உடல் எடை வளர்ச்சி வீதம் கொண்ட ஐந்து வயதுக்கு குறைந்த சிறுவர்கள், குறைந்த உடல் எடை சுட்டெண் கொண்ட கர்ப்பிணி, தாய்ப்பாலூட்டும் பெண்களுக்கு பொது சுகாதார திட்டத்தின் கீழ் இது இலவசமாக வழங்கப்படுகின்றது.

இந்நிலையில் திரிபோஷா விநியோகத்தை தொடர்வதனை உறுதி செய்வதற்கு உலக உணவுத் திட்டத்தின் உதவியை சுகாதார அமைச்சு நாடியிருந்தது.

இதற்கு பதிலளிக்கும் வகையில், உலக உணவுத் திட்டமானது சர்வதேச ஒத்துழைப்புக்கான கொரிய நிறுவனத்துடன் இணைந்து திரிபோஷா நிகழ்ச்சியை ஊக்குவிப்பதற்கும், பெண்கள், சிறுவர்களின் சுகாதார மற்றும் ஊட்டச்சத்தினை காப்பதற்கும், உதவுவதற்கும் நிதியை வழங்குவதற்கு ஒழுங்கு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: