திங்கள்முதல் மீண்டும் யாழ்ப்பாணத்திலிருந்து புகையிரத சேவைகள் ஆரம்பம் – நாளைமுதல் முற்பதிவுகளை மேற்கொள்ள முடியும் என யாழ்ப்பாணம் புகையிரத நிலைய அதிபர் அறிவிப்பு!
Saturday, January 16th, 2021யாழ்ப்பாணத்துக்கான ரயில் சேவை எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதால் நாளைமுதல் ஆசன முற்பதிவுகளை மேற்கொள்ளலாம் என யாழ்ப்பாணம் புகையிரத நிலைய அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்துள்ளார்.
புகையிரத சேவைகள் ஆரம்பமாகவுள்ளமை குறித்து இன்று சனிக்கிழமை ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் – “நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ரயில் சேவைகள் எதிர்வரும் 18ஆம் திகதி திங்கட்கிழமைமுதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதன்படி, யாழ்ப்பாணத்தில் இருந்து இரண்டு ரயில்கள் சேவையை ஆரம்பிக்கவுள்ளன. முதலாவதாக காங்கேசன்துறையில் இருந்து காலை 5.30 மணிக்குப் புறப்பட்டு, யாழ்ப்பாணத்தில் இருந்து காலை 6.10 மணிக்குப் புறப்படுகின்ற உத்தரதேவி கடுகதி ரயில் சேவை ஆரம்பமாகவுள்ளது.
அத்துடன், காங்கேசன்துறையில் இருந்து காலை 9 மணிக்குப் புறப்பட்டு, யாழ்ப்பாணத்தில் இருந்து 9.45 மணிக்குப் புறப்படும் யாழ் தேவி ரயில் சேவையும் ஆரம்பிக்கப்படுகின்றது.
அவ்வாறே, கல்கிசையில் இருந்து 5.55 மணிக்கும், கொழும்பிலிருந்து 6.35 மணிக்கும் புறப்படும் யாழ் தேவி ரயிலும், 11.50 மணிக்கு கொழும்பிலிருந்து புறப்படும் உத்தரதேவி ரயிலும் எதிர்வரும் 18ஆம் திகதி சேவையை ஆரம்பிக்கின்றது.
ஏனைய, ரயில் சேவைகள் எதிர்வரும் 25ஆம் திகதி தொடக்கம் ஆரம்பமாகவுள்ளது. முக்கியமாக, கொழும்பிலிருந்து புறப்படும் குளிரூட்டப்பட்ட ரயில், இரவு தபால் ரயில் உட்பட அனைத்து ரயில் சேவைகளும் படிப்படியாக ஆரம்பமாகவுள்ளன.
இதேவேளை, நாளை 17ஆம் திகதி தொடக்கம் காலையில் இருந்து ஆசனப் பதிவுகளை யாழ்ப்பாண ரயில் நிலையத்தில் முற்பதிவு செய்துகொள்ள முடியும்.
அத்தோடு, இதுகுறித்த மேலதிக விபரங்களுக்கு 021 2222271 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பினை மேற்கொண்டு அறிந்துகொள்ள முடியும்.
இதேவேளை, பயணிகள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி ரயில் பயணத்தை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்
Related posts:
|
|