தாய்நாட்டுக்கு சிறந்ததோர் எதிர்காலத்தை உருவாக்குவோம் – பிரதமர் தினேஷ் குணவர்த்தன வாழ்த்து!
Saturday, February 4th, 2023சுதந்திரத்தை வென்றெடுப்பதற்காக எம் முன்னோர்கள் செய்த தியாகங்களை மனதில் வைத்து, எம் தாய்நாட்டுக்காக சிறந்ததோர் எதிர்காலத்தை உருவாக்க உறுதி பூணுவோமென பிரதமர் தினேஷ் குணவர்த்தன தனது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
காலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்ற மிக முக்கியமான மைல் கல்லைக் குறிக்கும் 75ஆவது சுதந்திர தினத்தை இன்று நாம் கொண்டாடுகிறோம்.
எங்களில் பெரும்பாலானவர்கள் சுதந்திர இலங்கையில் பிறந்த தன் பாக்கியத்தை அங்கீகரிக்கின்ற வகையிலும், இந்த முக்கியமான மைல் கல்லை அடைந்திருப்பதையிட்டு எமது தேசியக் கொடியை ஏற்றி வைக்கும் பெருமிதத்துடனும் இந்த நிகழ்வைக் கொண்டாடுகிறோம். 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி 04 ஆம் திகதிக்கு முன்னர் பிறந்து காலனித்துவ ஆட்சியின் கீழ் வாழ்ந்து அனுபவித்த வேதனைகள் பற்றியும் எமது முன்னோர்கள் எமக்கான சுதந்திரத்தை பெற்றுத் தருவதற்காக மேற்கொண்ட போராட்டங்கள் பற்றி எண்ணிப் பார்ப்பதற்கும் இது ஒரு சிறந்த சந்தர்ப்பமாகும்.
இன்று நாம் எமது சுதந்திரத்தைக் கொண்டாடுவது மட்டுமல்லாமல், அதற்காகப் போராடியவர்களுக்கும், எமது நாட்டுக்காக ஒரு தொலைநோக்குப் பார்வையை கொண்டிருந்தவர்களுக்கும், அதற்காகத் தம்மையே தியாகம் செய்தவர்களுக்கும் நன்றி செலுத்துகிறோம்.
கடந்த 75 ஆண்டுகளில் தீவிரவாதிகள் மற்றும் பிரிவினைவாதி களிடம் இருந்து கடினமாக வென்றெடுக்கப்பட்ட சுதந்திரத்தை நிலைநிறுத்தவும் பாதுகாக்கவும் இதேபோன்ற தியாகங்களைச் செய்த ஆயுதப் படைகளைச் சேர்ந்த துணிச்சலான உறுப்பினர்களுக்கும் நாம் எமது மரியாதையை செலுத்த வேண்டும்.
ஒரு சுதந்திர தேசமாக நாம் பல முன்னேற்றங்களை அடைந்து ஒரு இளைஞர் படையை கட்டியெழுப்பினோம், எமது மக்களுக்கு சிறந்த சுகாதார மற்றும் கல்விச் சேவைகளை வழங்கினோம். எவ்வாறாயினும், அண்மைக்காலமாக எமது நாடு பல்வேறு சவால்களை எதிர்கொண்டு பொருளாதார பின்னடைவுக்கு முகம்கொடுத்துள்ளது. தன்னிறைவையும் உணவுப் பாதுகாப்பையும் அடைய விவசாய உற்பத்தியை அதிகரிக்கவும், பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் அரசாங்கம் தொடர்ச்சியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சவால்களை முறியடித்து பொருளாதார ரீதியில் நல்ல முன்னேற்றகரமான ஒரு தேசத்தை உருவாக்குவதே எமது உண்மையான விருப்பமாகும் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|