தாதியர் பட்டப்படிப்புக்கு ஜனாதிபதி நிதியுதவி!
Thursday, May 12th, 2016இலங்கையில் நீண்டகால தேவையாகவுள்ள தாதியர் பட்டப்படிப்பு பீடமொன்றை நிறுவுவதற்கு தேவையான உடனடி நிதியுதவிகளை வழங்க தயாராக இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அரச தாதி அலுவலர்கள் சங்கத்தின் உறுப்பினர்களை நேற்றுமுன்தினம் (10) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
கொழுப்புப் பல்கலைக்கழகத்துடன் இணைந்ததாக தாதியர் பட்டப்படிப்பு பீடமொன்றை உருவாக்குதல் தொடர்பாக ஏற்கனவே முன்மொழியப்பட்டிருப்பதுடன் அதற்காக 2016 ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் 2500 மில்லியன் ரூபாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சுகாதார சேவையினை வலுவானதாகவும் தரமானதாகவும் இலங்கையில் முன்கொண்டு செல்வதற்கு தன்னால் முடியுமான எல்லா வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்குவதற்கு தயாராக இருப்பதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
இலங்கையில் 40,000 தாதிகளுக்கான தேவை இருக்கின்ற போதிலும் தற்போது 31,000 தாதியினர் மட்டுமே பணிபுரிவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டின் தேவைக்கேற்ப திறமையான தாதியினரை பணியிலமர்த்துவது பாரிய பிரச்சனையாகவுள்ள அதேவேளை, தேசிய ரீதியில் காணப்படும் தாதியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான வேலைத்திட்டமொன்றின் அவசியம் தொடர்பாகவும் இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டினார்.
தொழிலாளர் சங்கங்கள் தமது கோரிக்கைகளை முன்வைக்கும்போது தொழில் தேவைகளை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டே கோரிக்கைகளை முன்வைப்பதாக தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், எதிர்காலத்தில் தொழிலாளர் சங்கங்கள் தமது கோரிக்கைகளை முன்வைக்கும்போது தேசிய இலக்குகளை அடைவதற்குரிய புதிய எண்ணக்கருக்கள் மற்றும் முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதன் முக்கியத்துவம் தொடர்பில் கவனம் செலுத்தவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
சுகாதாரம் போசாக்கு மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் பாலித மஹிபால உள்ளிட்ட பலர் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தனர்.
Related posts:
|
|