தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபருக்கு சட்டமா அதிபர் ஆலோசனை!

அமைதி ஆர்ப்பாட்டத்தின் மீது தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவிற்கு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்தச் சம்பவங்களைச் சூழ்ந்துள்ள உள்நாட்டு மற்றும் சர்வதேச பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, அவசர முன்னுரிமை அடிப்படையில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அவர் பொலிஸ் அதிபரை வலியுறுத்தியுள்ளார்.
அரசியலமைப்பின் 14வது சரத்தின் அடிப்படையில் பொதுமக்கள், பேச்சு சுதந்திரம், அமைதியான கூட்டம் மற்றும், சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இவற்றை மதித்து, பாதுகாப்பதும் அரசியலமைப்பில் கடமையாகும். எனினும் இந்த அரசியலமைப்பு விதிகள் நேற்றைய தாக்குதல்களின்போது மீறப்பட்டுள்ளன.
அரசியலமைப்புச் சுதந்திரத்தைப் பயன்படுத்துவதில் ஈடுபட்டவர்களுக்கு உடல் ரீதியாக காயங்களை ஏற்படுத்தும் வகையில் இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
எனவே சம்பந்தப்பட்ட விடயங்களின் தீவிர தன்மையைக் கருத்தில் கொண்டு, முழுமையான விசாரணைகளை நடத்துமாறு சட்டமா அதிபர், பொலிஸ் அதிபரை கேட்டுள்ளார்.
இந்த சம்பவங்கள் நாடளாவிய ரீதியில் வன்முறைகளை தூண்டியுள்ளமையால், சம்பவங்களின் பின்விளைவுகளை ஆராயுமாறு சட்டமா அதிபர் வலியுறுத்தியுள்ளார்.
சட்டமா அதிபரின் இந்த ஆலோசனையை அடுத்து முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் குழுவொன்று அலரி மாளிகைக்கு வெளியே ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு பொலிஸ் மா அதிபர் இன்று பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
|
|