தவறான தகவல்களைப் பரப்பி மக்களை குழப்பி வரும் சிலர் – தமது தனிப்பட்ட நிகழ்ச்சிநிரலுக்காக மக்களை தூண்டிவிட முயற்சி – அமைச்சர் பந்துல குணவர்தன கண்டனம்!

Saturday, February 11th, 2023

வரலாறு தெரியாதவர்கள் நாட்டின் நிதி செயற்பாடு தொடர்பில் சரியான தகவல்களை வழங்குவதற்கு பதிலாக தவறான தகவல்களை வழங்கி மக்களை தூண்டிவிடும் அநீதியான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக போக்குவரத்து ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வரலாறு தெரியாதவர்கள் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கமைய குறுகிய அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக செயற்படுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் அக்கிராசன உரைதொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று இடம் பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர், நிதி செயற்பாடுகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என நான் சபாநாயகரைக் கேட்டுக் கொள்கிறேன்.

2020 ஆம் ஆண்டு முதல் நெகிழ்வுப் போக்கான நிதி கொள்கையை முன்னெடுத்துச் சென்றதும் வட்டி வீதத்தை அதிகரித்ததும் மத்திய வங்கியே. அதற்காக அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு தீ வைத்தமை மிகவும் அநீதியானதாகும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமது அக்கிராசன உரையின் போது நாட்டின் தற்போதைய உண்மை நிலைமையை தெளிவுபடுத்தியுள்ளார். வரலாற்றில் முதல் தடவையாக அவர் இதனை நாட்டுக்கு வெளிப்படுத்தியுள்ளார்.

இலங்கை நம் அனைவரினதும் நாடு. அந்த வகையில் நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவடையும் போது நாட்டில் பெரும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

அதற்கு பலரும் பல்வேறு விதமான காரணங்களை தெரிவித்து வருகின்றனர். அரசியல் ரீதியான காரணங்களையும் முன்வைத்து வருகின்றனர்.

மஹிந்த ராஜபக்சவும் கோட்டாபய ராஜபக்சவும் நாட்டை நாசமாக்கி விட்டதாக கூறுகின்றனர். அவ்வாறு அவர்கள் மீது குற்றஞ்சாட்டுவது மிகவும் அநீதியாகும்.

வரலாறு தெரியாதவர்களே அவ்வாறான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: