தளர்த்தப்பட்டது ஊரடங்கு சட்டம் – மாகாணங்களுக்கு இடையில் பேருந்து சேவைகள் ஆரம்பம் – ஆசனங்களுக்கு அமைவாக பயணிகளை ஏற்றிச் செல்வது சட்டமாக்கப்படும் – போக்குவரத்து அமைச்சர் தெரிவிப்பு!

பேருந்துகளின் ஆசனங்களுக்கு அமைவாக பயணிகளை ஏற்றிச் செல்வது எதிர்கால்தில் சட்டமாக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அத்துடன் பிரயாணச்சீட்டு பெற்றுக்கொள்ளும் ஒவ்வொருவருக்கும் ஆசனங்களில் அமர்ந்து செல்வதற்கு உரிமையுண்டு எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அண்மைய காலங்களில் பயணிகளின் உரிமைகளை உறுதி செய்ய எந்த அரசாங்கமும் நடவடிக்கை எடுக்காததால் எதிர்காலத்தில் இதை சட்டப்பூர்வமாக்க ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே கொழும்பு, கம்பஹா உள்ளிட்ட நாடளாவிய ரீதியில் இன்றுமுதல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. எனினும் மறு அறிவித்தல் வரை நாளாந்தம் இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
நாடுமுழுவதும் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட போதிலும் தொழிற்சாலைகள், நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் விற்பனை நிலையங்களில் பணிகளில் ஈடுபடும் சந்தர்ப்பங்களிலும் பயணிகள் போக்குவரத்தின் போதும் சுகாதார அதிகாரிகளினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள நடைமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொற்று நீக்குதல், முகக்கவசங்களை அணிதல், அடிக்கடி கைகளை கழுவுதல் மற்றும் சமூக இடைவெளியை பேணுதல் என்பன கண்டிப்பாக பேணப்பட வேண்டும் இதில் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளதுடன் சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி நாளாந்த பணிகளில் ஈடுபடுமாறு அரசாங்கம் பொதுமக்களை கேட்டுள்ளது.
இதனிடையே கொரோனா தொற்’றை கட்டுப்படுத்த அமுலாக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு நாடுமுழுவதும் தளர்த்தப்பட்ட நிலையில் கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களை தவிர்த்து ஏனைய பிரதேசங்களுக்கு இடையிலான பேருந்து சேவை இன்றுமுதல் வழமைக்கு திரும்பியுள்ளன.
இச்சேவைகள் அதிகாலை 4.30 மணிக்கும் மாலை 6 மணிக்கும் இடையிலான காலப்பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ளளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சுகாதார பரிந்துரையின் பிரகாரம் சமூக இடைவெளியை பேணுவதற்காக பேருந்துகளின் ஆசனங்களின் எண்ணிக்கைக்கமைய மாத்திரம் பயணிகளை அழைத்து செல்ல வேண்டும் என வழங்கப்பட்டுள்ள ஆலோசனைக்கமைய பயணிப்பதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வடக்கு மாகாணத்தில் இருந்து வெளிமாவட்டங்களிற்கு செல்வதற்கான பேருந்துகள் இன்று ஆரம்பிக்கப்பட்டது.
இதன் ஒரு கட்டமாக யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு மாகாணம் தாண்டிய வெளி மாவட்டங்களுக்கான இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டது.
இச்சேவைகளின்போது சுகாதார அமைச்சின் பரிந்துரைகள் முழுமையாக பின்பற்றப்பட்டு சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டு பயணிகள் பேருந்துகளில் ஏற்றப்பட்டு சேவைகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|