தற்போதைய நிலையில் எரிபொருள் விலையை அதிகரிக்கும் தீர்மானம் இல்லை – அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Wednesday, February 23rd, 2022

தற்போதைய நிலையில் எரிபொருள் விலையை அதிகரிக்கும் தீர்மானம் இல்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள மின்சாரம் மற்றும் எரிபொருள் பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்காக நேற்று பிற்பகல் இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த விசேட அமைச்சரவை கூட்டத்தில் மத்திய வங்கியின் ஆளுநர், நிதியமைச்சின் செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சரவை கூட்டத்தை நிறைவு செய்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அமைச்சர் மஹிந்த அமரவீர, எரிபொருள் விலையை அதிகரிக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.

அத்துடன் எரிபொருளை தொடர்ந்து தடையின்றி விநியோகிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

எரிபொருள் அடங்கிய கப்பல்களுக்கான டொலர்களை விடுவிப்பதற்கு இதன்போது இணக்கம் வெளியிடப்பட்டது.

இலங்கை மின்சார சபையினால் கனியவள கூட்டுதாபனத்திற்கு செலுத்தப்பட வேண்டிய 80 பில்லியன் ரூபா கடனை நிதியமைச்சு செலுத்துவதற்கு இணங்கியுள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எரிபொருளுக்கான கட்டணத்தை செலுத்துவதற்கு முன்னுரிமை வழங்குமாறு மத்திய வங்கியின் ஆளுநருக்கும் நிதிமைச்சின் செயலாளருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதன்போது அறிவுறுத்தியதாக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்வரும் புத்தாண்டு காலப்பகுதிக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை தடையின்றி வழங்குவது தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டதாக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: