தரம் ஆறு முதல் இனி தொழில்நுட்பப் பாடம் – கல்வி அமைச்சு!

இளநிலைப்பிரிவு மாணவர்களுக்கும் நடப்பாண்டு முதல் தகவல் தொழில்நுட்பப் பாடம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கொழும்பு கல்வி அமைச்சின் தீர்மானத்துக்கு அமையவே அந்தப் பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்களுக்கு புகட்டப்படும் கல்வியில் தகவல் தொழில்நுட்பத் துறையை
மேம்படுத்த கொழும்பு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதுவரை காலமும் உயர்தரம், சாதாரணதரம் மற்றும் தரம் -10 ஆகிய வகுப்புகளுக்கு தகவல் தொழில் நுட்பப் பாடம் கற்பிக்கப்பட்டது.
நடப்பாண்டு முதல் தரம் – 6 இல் இருந்து தகவல் தொழில்நுட்பத் துறையை நடைமுறைப்படுத்தியுள்ளது கொழும்பு கல்வி அமைச்சு. இந்தத் தரங்களுக்குத் தேவையான பாட விதானம் ஏற்கனவே தேசிய கல்வி நிறுவனத்தால் வகுக்கப்பட்டுள்ளது எனவும் இந்தத் துறைக்கான பாடப் புத்தகங்கள் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தால்
எதிர்வரும் காலங்களில் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பாடசாலைகளின் நேரசூசியில் தகவல் தொழில்நுட்பத் துறையை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அதன் பொருட்டு விடுபடும் பாடங்களை மேலதிக வகுப்புகள் மூலம் சீர்செய்ய முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பாடத்துறையை மேம்படுத்துவதன் ஊடாக நவீன உலகின் ஓட்டத்தில் இலங்கைக் குடிமக்களைத் தனிமைப்படுவதை தவிர்த்து தொழில் நுட்ப தொடர்பு சாதன அறிவைக் கொண்டவர்களாக மாற்ற முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக முழுமையான விவரம் அடங்கிய அறிவுறுத்தல்கள் அனைத்து மாகாணக் கல்விச் செயலர்களுக்கும், மாகாணக் கல்விப் பணிப்பாளர்களுக்கும், வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் கல்வி அமைச்சின் செயலர் சுனில் கெட்டியாராட்சியின் ஒப்பத்துடன் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
தொழில் நுட்பத் துறையின் ஊடாக ஏனைய பாடங்களையும் இலகுவாக கற்க முடியும் என்பன போன்ற எட்டு விதமான நன்மைகளையும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய விடயங்களையும் கல்வி அமைச்சின் செயலர் அதில் விளக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
|
|