தரமான பொருட்களை மட்டுமே ஏற்றுமதி செய்யுங்கள் – ஏற்றுமதியாளர்களிடம் வர்த்தக அமைச்சர் கோரிக்கை!

Tuesday, December 7th, 2021

பொருட்களை ஏற்றுமதி செய்யும்போது தரம் மற்றும் நம்பிக்கையை நிலைநிறுத்தும் வகையில் பணியாற்றுமாறு ஏற்றுமதியாளர்களிடம் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.

வர்த்தக அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் பந்துல குணவர்தன இந்த கோரிக்கையை விடுத்திருந்தார்.

வெறும் இலாப நோக்கத்திற்காக தரம் குறைந்த பொருட்களை ஏற்றுமதி செய்தால், நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் தரமான மிளகு உற்பத்தி செய்யப்படும் நிலையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தரத்திற்கு இணங்காத பிற கூறுகளின் கலவையால், சந்தை பாதிக்கப்பட்டு விலை வீழ்ச்சியடைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

தரமான தேயிலைக்கு பதிலாக தூசி தேயிலை ஏற்றுமதி செய்யப்படுவதனால் சந்தையும் பாதிக்கப்படும் அதேவேளை போலி கற்கள் ஏற்றுமதி செய்யப்படுவதால் இரத்தினக்கல் தொழில்துறையும் பாதிக்கப்படுவதாக அமைச்சர் கூறினார்.

எனவே, வர்த்தகர்கள் தரமான பொருட்களை ஏற்றுமதி செய்வதை உறுதி செய்து, நிலையான சந்தை மற்றும் விலையை உறுதி செய்யுமாறு அமைச்சர் பந்துல குணவர்தன கேட்டுக் கொண்டார்.

மேலும், இயற்கையான நெல்லுக்கு ஒரு சந்தை வாய்ப்பு உருவாகியுள்ளதாக கூறிய அமைச்சர், சீனியின் கலவையானது உண்மையான ட்ரீக்கிளின் தரத்தையும் குறைக்கிறது எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: