தமிழ் மக்களுக்கான சரியான அரசியல் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவே – கட்சியின் பரந்தன் வேட்பாளர் கனகசபை நடராஜா!

Friday, January 12th, 2018

தமிழ் மக்கள் தேடும் சரியான அரசியல் தலைமைத்துவத்தை எமது  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியே கொண்டுள்ளது. அந்தவகையில் தமிழ் மக்களுக்கான சரியான அரசியல் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவே – என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிடும் கிளிநொச்சி பரந்தன்  வட்டார வேட்பாளர்  கனகசபை நடராஜா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி முட்கொம்பன் பகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கட்சியின் கிளிநொச்சி மாவட்ட வேட்பாளரான கனகசபை நடராஜா மேலும் தெரிவிக்கையில் –

கடந்த காலங்களில் எங்கள் கட்சியின் கொள்கையான இணக்க அரசியலுக்கு பல விமர்சனங்கள் இருந்தன. ஆனாலும் தற்போது நாம் முன்னெடுத்த இணக்க அரசியலின் வழிமுறையை இதர தமிழ் தரப்பினரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆனாலும் அவர்கள் இன்னும் அதன் பொறிமுறைக்குள் வராதிருப்பது கவலையளிக்கின்றது.

பிரதேசங்களின் வீதி அபிவிருத்தி சுகாதார மேம்பாடு குடி  நீர்  உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி கடந்த காலங்களிலும் மக்களது தேவைகளுக்கேற்ப திருப்திகரமாகவே மேற்கொண்டுவந்தது.

இதனடிப்படையில் கடந்தகால பணிகளை தொடர்ந்தும் எமது கட்சி முன்னெடுக்க திடசங்கற்பம் பூண்டுள்ளது.  எனவே தமிழ் மக்களது பிரச்சினைகளை தீர்ப்பதில் தூர நோக்கமுள்ள சிந்தனையில் செயற்படும் எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையே சரியானது என மக்கள் இன்று உணர்ந்துகொண்டுள்ளனர்.

அந்தவகையில் பிரதேச சபைகளின் அதிகாரங்களுக்கு உட்பட்ட அபிவிருத்திகளை  செவ்வனே செய்ய எமது கட்சி சமூக அக்கறையுள்ள சிறந்த வேட்பாளர்களை தெரிவு செய்துள்ளது.   எனவே வரவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மக்கள் எமக்கு அதிகரித்த வாக்குகளை வழங்கி வெற்றிபெறச் செய்யும் பட்சத்தில் தத்தமது பிரதேசங்களினது அபிவிருத்திகள் துரிதகதியில் நடைபெறும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: