தமிழ் மக்களின் அகதி வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து சுபீட்சமான எதிர்காலத்தை உருவாக்கியிருக்கிறோம் – நாடாளுமன்றில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Tuesday, May 18th, 2021

30 வருட பயங்கரவாத யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து தமிழ் மக்களின் அகதி வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளோம் என்று தெரிவித்துள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச நாட்டில் சுபீட்சமான எதிர்காலத்தை உருவாக்கியிருக்கிறோம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றையதினம் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது பிரதமர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –  

இலங்கை இன்று சிறப்பான நாளாக விளங்குகின்றது. 30 வருட பயங்கரவாத யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து 12 வருடங்கள் கடந்துவிட்டன.

2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி எனக்கு நன்றாக நினைவிருக்கின்றது. அன்று மக்கள் வீதியில் இறங்கி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார்கள். இந்த வெற்றி நாட்டின் ஒரு பகுதியினர் மாத்திரம் பெற்ற வெற்றியல்ல.

பயங்ரவாதிகள் பணயக்கைதிகளாக வைத்திருந்த நான்கு இலட்சத்திற்கும் அதிகமான மக்களை நாங்கள் மீட்டோம். வடக்கு கிழக்கு மக்களின் அகதி வாழ்க்கையை நிறைவுக் கொண்டுவந்துள்ளோம்.

20 வருடங்களாக அகதி முகாம்களில் வாழ்ந்த கிழக்கு மக்களின் சொந்த வீட்டில் வாழக்கூடிய சூழலை ஏற்படுத்திக் கொடுத்தோம். மரண பயமற்ற நிலையில் மக்கள் வாழக்கூடிய நிலையை ஏற்படுத்தினோம். இந்த வெற்றி வடக்கு, கிழக்கு மக்களுக்கு உரித்துடையது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் புலிகள் மக்கள் பிரதிநிதிகளைதான் முதலில் கொலை செய்ய ஆரம்பித்தார்கள். துரையப்பா தொடக்கம் அமிர்தலிங்கம் வரை பலர் கொலை செய்யப்பட்டனர். அதேபோன்று ரணசிங்க பிரேமதாச, லக்ஸ்மன் கதிர்காமர், காமினி திசாநாயக்க, லலித் அத்துலத்முதலி, ஜெயராஜ் பெர்ணான்டோ புள்ளே ஆகிய பலர் பயங்கரவாதிகளினால் கொலை செய்யப்பட்டனர்.

வடக்கு, கிழக்கு மக்கள் பிரதிநிதிகள் தமது கிராமத்திற்கு சென்று சுதந்திரமான கருத்துக்களை கூறுவதற்கு ஏற்ற காலம் அன்றிருக்கவில்லை. மக்களை அழிப்பதற்காக யுத்தம் புரியவில்லை. அப்பாவி மக்களை பணயக்கைதிகளாக வைத்திருந்தவர்களுடன் தான் யுத்தம் புரிந்தோம்.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து நான்கு இலட்சம் பொதுமக்களை மிகவும் பாதுகாப்பாக மீட்டெடுத்தோம். அதேபோன்று, தமிழ் மக்களின் அகதி வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்ததுடன், வடக்கு கிழக்கு மக்களை மீள்குடியேற்றினோம்.

அதுமாத்திரமன்றி, நாட்டில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து சுபீட்சமான ஒரு எதிர்காலத்தை உருவாக்கியிருக்கிறோம்.

எந்த வகையில் எதிர்ப்புக்கள் வந்தாலும் படையினரை காட்டிக் கொடுக்கப் போவதில்லை. முதலாவதும் எனது தாய்நாடே, இரண்டாவதும் எனது தாய்நாடே, மூன்றாவதும் எனது தாய்நாடே என்று பிரதமர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: