தமிழ் தேசியத்தினையும் சமூக மாற்றத்தினையும் ஒருங்கே கொண்டுசெல்லும் மக்கள் சக்தியை உருவாக்குவோம் – பல்கலைக்கழக மேதின கூட்டத்தில் வலியுறுத்து!

Monday, May 1st, 2017

தமிழ் தேசியத்தினையும் சமூக மாற்றத்தினையும் ஒருங்கே கொண்டுசெல்லும் மக்கள் சக்தியை உருவாக்குவோம் என யாழ் பல்கலைக்கழக சமூகத்தினரால் முன்னெடுக்கப்பட்ட மேதின பேரணியில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இன்றையதினம் யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த பேரணியாது, கலட்டி புகையிரத வீதி வழியாக பலாலி வீதியை சென்றடைந்து, அங்கிருந்து இராமநாதன் வீதி வழியாக யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் நிறைவடைந்தது.

இதன்போது மக்கள் அபிலாஷைகளையும் அடிப்படை உரிமைகளையும் வென்றெடுக்க தவறும் தமிழ் அரசியல்வாதிகளை நீக்கம் செய்வோம் எனவும் ….

தேசம், இறைமை சுயநிர்ணயம், சமஷ்டி, அடிப்படையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாண குரல்கொடுப்போம், இவை இல்லாத அரசியல் தீர்வை நிராகரிப்போம்…..

அரசியல் கைதிகள் உடனடியாக எவ்வித நிபந்தனையுமின்றி விடுதலை செய்யப்படல் வேண்டும். படையினர் பறித்த காணிகள் உடனடியாக மக்களிடம் கையளிக்கப்படல் வேண்டும், மக்கள் தாமாக நடத்தும் போராட்டங்களில் நாங்களும் இணைந்துகொள்வோம். இடம் பெயர்ந்த மக்கள் அனைவரும் உடனடியாக மீள்குடியேற்றம் செய்யப்படல் வேண்டும்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கு உடனடியாகத் தீர்வு வழங்கு, இனப்படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என உலக முற்போக்கு ஜனநாயக சக்திகளுடன் இணைந்து குரல்கொடுப்போம். தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்படுகின்ற திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும். இதைத் தடுக்க சர்வதேச பாதுகாப்பு பொறிமுறையை உருவாக்குவோம்.

தமிழ் மீனவர்களின் வாழ்வுரிமையை பறிப்பது உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும். இதற்காக இணைந்து போராடுவோம். சாதி, மத பிரதேச பால் ஒடுக்குமுறைகளை இல்லாதொழிப்போம். முலையக மக்களின் வாழ்வாதார அடையாளப் போராட்டங்களுக்கு துணை நின்று குரல் கொடுப்போம்.

பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையை விடுவிக்கப் போராடுவோம். புலம், தமிழகத்திற்கிடையே ஓர் ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்போம் தவறான வழிகளில் செல்லும் தமிழ் இளைஞர்களை நல்வழிப்படுத்தி சமூகத்திற்கு பொருத்தப்பாடுடையவர்களாக மாற்றும் செயற்திட்டங்களை முன்னெடுப்போம் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளார்கள்.

இன்றைய பேரணியை இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் கிராமிய உழைப்பாளர் சங்கம், தமிழ் மக்களின் வாழ்வுரிமைக்கான செயற்பாட்டு மையம், பல்கலைக்கழக ஊழியர் சங்கம் உட்பட 6 அமைப்புக்கள் ஒன்றினைந்து யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: