தமிழ் – சிங்கள புத்தாண்டு பிறப்புக்குப் பின்னரான ஊரடங்கு நடைமுறை தொடர்பாக வெளியான தகவல்!

Sunday, April 12th, 2020

கொரோனா நோய்த்எ தொற்று அபாய வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது நடைமுறையில் இருக்கும் ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் நடைமுறையிலேயே இருக்கும்.

ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறையில் உள்ள ஊரடங்கு சட்டம்  14 ஆம் திகதி தளர்த்தப்பட மாட்டாது என்பதுடன் அது ஏப்ரல் 16ஆம் திகதி, காலை 6.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த 19 மாவட்டங்களிலும் 16 ஆம் திகதி காபலை 06.00 மணிக்குத் தளர்த்தப்படும் ஊரடங்குச் சட்டம், அன்றைய தினமே பிற்பகல் 04.00 மணிக்கு மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்.

குறித்த மாவட்டங்களிலும், ஊரடங்கு சட்டம், ஏப்ரல் 14ஆம் திகதி, செவ்வாய் காலை 06.00 மணிக்கு நீக்கப்பட்டு, அன்றைய தினம் மாலை 04.00 மணி முதல் மீண்டும் நடைமுறைக்கு வரும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த போதும், தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா நோய்த்தொற்று பரவுவதைத் தடுப்பதற்காகப் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் மற்றும் நடைமுறைகள் அனைத்துமே – மக்களின் நலனுக்காகவே மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே, புரிந்துணர்வுடனும் பொறுப்புடனும் நடந்துகொள்ளுமாறு அரசாங்கம் மக்களிடம் கேட்டுக்கொள்ளுகின்றது.

பொருட் கொள்வனவில் ஈடுபடும் போது – அத்தியாவசியப் பொருட்களுடன் அதனை மட்டுப்படுத்திக் கொள்ளுமாறும், அத்தோடு, தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும் அரசாங்கம் கேட்டுக்கொள்ளுகின்றது.

மேலும் – உயிர்த்த ஞாயிறு மற்றும் புத்தாணடுப் பிறப்பு நாட்களில் – பாரம்பரிய சம்பிரதாயங்கள் மற்றும் தொடர்புகளைக் குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுமே மட்டுப்படுத்திக்கொள்ளுமாறும் அரசாங்கம் வேண்டிக்கொள்ளுகின்றது.

அத்தியாவசிய சேவைப் பணியாளர்கள் தவிர்ந்த ஏனையவர்களுக்கு – மாவட்டங்களுக்கிடையில் போக்குவரத்துச் செய்வது முழுமையாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகளை வினைத்திறனாகச் செயற்படுத்தும் வகையில் வழங்கப்பட்டுள்ள அனுமதி மற்றும் நடைமுறைகளைத் துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.

ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ள காலப்பகுதியில் – அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் வேறு பொருட்களை வீடுகளில் இருந்தபடியே மக்கள் பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் தொடர்ச்சியாக வழங்கல்ளை மேற்கொள்ள அரசாங்கம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

எந்த மாவட்டத்திலாயினும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் சிறு தேயிலை தோட்டங்கள், மற்றும் ஏற்றுமதிப் பயிர்களின் உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட மக்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

மேலும் – கொழும்பு, கண்டி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக்க் குறிப்பிடப்பட்டுள்ள பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாகவே பேணப்படும். எவரும் இந்த கிராமங்களுக்கு உள்வருவதோ அல்லது அங்கிருந்து வெளியேறுவதோ மறு அறிவித்தல் வரை முழுமையாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.

Related posts: