தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு முன் எரிபொருள் விநியோகம் வழமைக்கு திரும்பும் – வலுச் சக்தி அமைச்சு நம்பிக்கை தெரிவிப்பு!
Saturday, March 26th, 2022நாட்டில் தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் எரிபொருள் விநியோகம் வழமைக்கு திரும்பும். தற்போது எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் போதியளவு எரிபொருள் காணப்படுவதால் சில பவுசர்கள் திருப்பி அனுப்பப்படுவதாக வலுசக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.
இதே வேளை கடந்த 12 நாட்களாக கொழும்பு துறைமுகத்தில் 20 000 மெட்ரிக் தொன் டீசல் , 20 000 மெட்ரிக் தொன் விமான எரிபொருள் என்பவற்றுடன் நங்கூரமிடப்பட்டிருந்த சிங்கப்பூர் கப்பலுக்கு 42 டொலர் செலுத்தப்பட்டுள்ளதோடு , இந்திய கடன் திட்டத்தின் கீழ் 35 000 மெட்ரிக் தொன் பெற்றோலுடன் பிறிதொரு கப்பலொன்று நாட்டை வந்தடையவுள்ளதாகவும் வலு சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் காணப்படும் எரிபொருள் நெருக்கடி தொடர்பில் வலுசக்தி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது :
எரிபொருள் நெருக்கடி ஏற்பட முன்னர் ஒன்றரை அல்லது 2 நாட்களுக்கு ஒரு முறையே பவுசர்கள் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு அனுப்பப்படும் ஆனால், தற்போது சுமார் 10 – 15 மணித்தியாலங்களுக்கு ஒரு முறை எரிபொருள் பவுசர்கள் அனுப்பப்படுகின்றன.
அது மாத்திரமின்றி காலை 6 மணிக்கே எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்படுகிறது. கொழும்பிலுள்ள அனைத்து எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கும் இரு சந்தர்ப்பங்களில் எரிபொருள் பவுசர்களை அனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய டீசல் மற்றும் பெற்றோல் பவுசர்கள் காலையிலும் பின்னர் பகல் 2 – 3 மணிக்கு இடையிலும் அனுப்பி வைக்கப்படவுள்ளன.
எவ்வாறிருப்பினும் சில எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் போதியளவு எரிபொருள் காணப்படுகின்றமையால் , பவுசர்கள் திருப்பி அனுப்பப்படுவதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
நாட்டை வந்தடைந்துள்ள கப்பலொன்றிலிருந்து முத்துராஜவெல சேமிப்பு முனையத்திற்கு பெற்றோலை இறக்கும் பணிகள் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் எரிபொருள் விநியோகம் வழமைக்கு திரும்பும் என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
|
|