தமிழ் கைதிகள் 16 பேர் பொதுமன்னிப்பில் விடுவிக்கப்பட்டனர்!

Thursday, June 24th, 2021

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச வழங்கிய பொது மன்னிப்பின் அடிப்படையில் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் 16 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு அவர்களுக்கு ஜனாதிபதியால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதாக  சிறைச்சாலைகள் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் சிறிய குற்றங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 77 பேர் பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, இன்றையதினம் மொத்தமாக 93 கைதிகள் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்படுவதாக சிறைச்சாலை பேச்சாளர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, தமிழ் கைதிகளின் விடுதலை தொடர்பில் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நாடாளுமன்றில் வெளியிட்டுள்ள விசேட அறிவித்தலானது தங்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாக தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர், உறவினர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

நேற்றையதினம் கைதிகள் விடுதலை தீர்மானம் தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் அந்த அமைப்பு இதனைத் தெரிவித்துள்ளது.

தமிழ் அரசியல் கைதிகளை புனர்வாழ்வுக்கு உட்படுத்தியேனும் நியாயத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நாடாளுமன்றில் தெரிவித்தார்.

வரலாற்றில் முதற்தடவையாக ஆளும் அரசாங்கத்தின் பொறுப்புமிகு அமைச்சர் ஒருவர் இவ்வாறு கூறியிருப்பது தமது உறவுகளின் துரித விடுதலைக்கான நல்லெண்ண சமிக்ஞை என்றே தாம் நம்புவதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

அதுமட்டுமன்றி ஆளும் கட்சியை சேர்ந்த உறுப்பினர்களும், எதிர்த் தரப்பு உறுப்பினர்களும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் வேண்டுகோளையும், அதற்கு சாதகமாக பதிலளித்த நீதி அமைச்சரின் கருத்தையும் முழுமனதோடு ஏற்றுக்கொண்டு கைதிகளின் விடுதலை விவகாரத்தை ஆதரித்திருந்தமை முக்கியமான விடயமாகும்.

இது தொடர்பில் சபாநாயகரும் கூட முக்கியமானதொரு விடயத்திற்க்கு அனைத்து உறுப்பினர்களும் எந்தவொரு எதிர்ப்பையும் காட்டாது உடன்பட்டிருந்ததையிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.

நிச்சயமாக நீண்ட நெடுங்காலம் சிறையில் வாடும் தங்களது பிள்ளைகளின் உண்மை நிலையினை சகோதர சமூகத்தின் மக்கள் பிரதிநிதிகள் உணர்ந்திருக்கின்றமையானது தங்களது உறவுகளின் விடுதலைக்கு தீர்வினை தருகின்ற முதற் புள்ளி என்றே இதனை கருதுவதாக தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர், உறவினர்கள் அமைப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: