தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிப்பது சாத்தியமில்லை : அமைச்சர் டி. எம்.சுவாமிநாதன் தெரிவிப்பு 

Wednesday, April 12th, 2017
93 அரசியல் கைதிகள் விடுவிப்புத் தொடர்பில் அரசாங்கம் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய தேவையிருக்கிறது. சம்பந்தப்பட்ட அரசியல் கைதிகளுக்கும் இது தொடர்பான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.  மிகவிரைவாக அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு எமது அலுவலகம் துணை செய்திருக்கிறது. உடனடியாக அவர்களை விடுவிப்பது சாத்தியமில்லை. சட்ட ரீதியாகவே அவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். 93 அரசியல் கைதிகள் தொடர்பான பெயர் விபரங்கள் அனைத்தும் என்னிடமிருக்கிறது. அவர்களது விபரங்கள் தேவையானால் என்னுடன் தொடர்பு கொள்ளுங்கள் எனத் தெரிவித்தார்  சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி. எம்.சுவாமிநாதன்.
பனை அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் பனை சார் உற்பத்திப் பயனாளிகளுக்கான வாழ்வாதார உபகரணங்கள் கையளிப்பும், நூல் வெளியீட்டு விழாவும் இன்று புதன்கிழமை(12) முற்பகல் யாழ். மத்திய கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஊடகவியலாளரொருவரின் கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
65 ஆயிரம் பொருத்து வீட்டுத் திட்டம் தொடர்பாக 76 ஆயிரம் பேரின் விண்ணப்பங்கள் எனக்குக் கிடைத்துள்ளன. அதன் முதற்கட்டமாகவே நாங்கள் தற்போது ஆறாயிரம் வீடுகளை நிர்மாணித்து வருகிறோம். மக்கள் அதனைப் பார்வையிட்டு இந்த வீடுகள் விருப்பமெனில் ஏற்றுக் கொள்ளலாம். விருப்பமில்லாவிடில் நாங்கள் அதனை மீளவும் திருப்பியெடுக்கும் எண்ணம் எதுவுமில்லை.
இம்மாதம்-24 ஆம் திகதி அனைத்து அமைச்சர்களுடனும், படைத்தளபதிகளுடனும் நன்கு கலந்தாலோசித்து கேப்பாப்புலவு மற்றும் வலி.வடக்கு மக்களின் காணி விடுவிப்புத் தொடர்பில் முடிவெடுக்கப்படும். இந்த மக்களின் காணி விடுவிப்புத் தொடர்பில் என்னால் முடிவெதுவும் எடுக்க முடியாது. படைத் தளபதிகள் தான் இது தொடர்பான முடிவுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

ஒய்வு பெற்ற இராணு வீரர்களுக்கு தொழில்வாய்ப்பு!
குடாநாட்டில் நோய் தொற்று அதிகரிப்பு !
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் யாழ்.மாவட்டச் செயலகம் முன்பாகக் காலவரையற்ற போராட்டத்தில் குதிப்பு!
யாழில் மரக்கறி வகைகளின் விலைகள் அதிகரிப்பு!
சந்தைகளில் இனிமேல் உள்ளூராட்சிசபைகளே வரி அறவிட வேண்டும் - உற்பத்தியாளர்கள்!