தமிழ்மக்களின் அரசியல் அதிகாரத்தை முடக்கி ஆட்சி அதிகாரத்தை அனுபவிக்கின்றது கூட்டமைப்பு

Thursday, April 20th, 2017
தமிழ்மக்களை அரசியல் சமத்துவத்துடனும், பொருளாதார அபிவிருத்தியுடனும் வாழ விடக்கூடாது என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திட்டமிட்டு செயற்பட்டு வருவதை தமிழ்மக்கள் இன்று உணர்ந்திருக்கின்றார்கள்.
எதிர்ப்பு அரசியலாலும், இணக்க அரசியலாலும் தமிழ்மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க இயலாதவர்களாக இருக்கும் அதேவேளை கிடைக்கப்பெறுகின்ற நல்ல திட்டங்களையும் அரசியல் காழ்ப்புனர்ச்சி காரணமாகவும், தமக்கிடையேயான அரசியல் போட்டித் தன்மைகள் காரணமாகவும் தட்டிக் கழிக்கின்றார்கள்.
நாம் மத்திய அரசாங்கத்துடன் இணக்க அரசியல் நடத்தியபோது, மகாவலி கங்கை நீரை வடக்கு, கிழக்கு மாகாணங்களின் விவசாய எழுச்சிக்காக கொண்டுவருவதற்கும், களுகங்கை நீரை வடக்கு மாகாணத்திற்கு குடிநீர் தேவைக்காக கொண்டுவருவதற்கும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தோம். இரணைமடுக் குளத்துக்கு நீரை கொண்டுவந்து அங்கு நீரைத் தேக்கிவைத்து விவசாயத்திற்கு தேவையான நீரை வழங்குவதும், மேலதிகமான நீரை யாழ்ப்பாண மக்களுக்கு குடி நீராக வழங்குவதும் எமது முயற்சியின் நோக்கமாக இருந்தது.
ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரோ ‘மகாவலி நீரை வடக்கு மாகாணத்திற்கு கொண்டுவந்தால் அந்தத்திட்டத்துடன் சிங்களவர்களும் வந்து குடியேறுவார்கள்’ என்று இனவாதம் பேசி அதற்குத் தடை போட்டார்கள். இரணைமடு, யாழ்ப்பாணம் குடிநீர் திட்டத்தை பிரதேச வாதம் பேசி தடுத்து நிறுத்தியதுடன் இப்போது அந்தத்திட்டத்தில் யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் வழங்கும் திட்டத்தை அகற்றிவிட்டு, இரணைமடுக் குளத்தை புனரமைக்கப்போவதாக அறைகுறையான திட்டத்தை ஆரம்பித்து அதையும் இடைநடுவில் கைவிட்டுள்ளார்கள்.
யாழ்.குடா நாட்டுக்கு குடிநீர் தட்டுப்பாடு அதிகரிக்கத் தொடங்கியிருப்பதுடன், நிலத்தடி நீரும் துரிதமாக மாசடைந்தும் வருகின்ற தற்போதைய சூழலில் மருதங்கேணியில் கடல் நீரை நன்னீராக சுத்தம் செய்து வழங்கும் திட்டத்தை அரசாங்கம் வகுத்தது. அதற்கு அவர்களின் கட்சி உள்குத்துவாதம் பேசி அதையும் தடுக்க முயற்சிக்கின்றார்கள். ஆனால் அத்திட்டத்தை ஆராய்ந்த ‘நாரா’ அமைப்பினர் தமது அறிக்கையில் ‘மருதங்கேணியில் கடல் நீரை நன்னீராக சுத்தம்செய்வதால் எவ்விதமான சுற்றுச்சூழல் பாதிப்புக்களும் ஏற்படப்போவதில்லை’ என்று தமது அறிக்கையில் தெரிவித்திருக்கின்றார்கள்.
இவற்றைப்போல் வீட்டுத்திட்டங்களை முன்னெடுப்பதற்கும், இதர கட்டுமானப் பணிகளை முன்னெடுப்பதற்கும் தேவையான மணலைப் பெற்றுக்கொள்ள வழியில்லாமல் யாழ்ப்பாண மக்கள் இருக்கின்றார்கள். அநாவசியமான அரசியல் தலையீடுகளும், அதிகாரிகளின் அசமந்தப்போக்கும் தலைதூக்கியிருப்பதால், மக்களுக்கு நியாயமான விலையில் மணல் கிடைக்க வாய்ப்பு இல்லாமல் போயுள்ளது. அரசியல் கைக்கூலிகளை வளர்த்துவிடுவதற்காக கள்ளச் சந்தையை ஊக்குவித்துள்ளார்கள். இதனால் மணல் வியாபாரமானது இன்று கொள்ளைக் கோஷ;டிகளின் கைகளில் சிக்கியுள்ளது என்று மக்கள் கூறுகின்றனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மணல் விநியோகமானது சட்ட நெறிமுறைகளுக்கு அமைவாகவும், ஒழுங்குபடுத்தப்பட்டதாகவும் யாழ்ப்பாணத்தில் சீராக நடைபெற்றது. அதையும் அரசியல் காழ்ப்புனர்ச்சி காரணமாகவே தடுத்து நிறுத்தியதால் இன்று மணல் கிடைக்காமல், கட்டுமானப் பணிகள் முடக்கப்பட்டுள்ளன. இதனால் யாழ்ப்பாண மக்கள் மணலைப் பெருவதற்கு ஆவணங்களை பெறுவதற்காக சுமார் மூன்று மாதங்கள் ஒவ்வொரு அலுவலகங்களுக்கும் அலைவதுடன், அதிக விலையும் கொடுக்க வேண்டியிருக்கின்றது. முன்னர் ஒரு இடத்தில் விண்ணப்பித்து செலவுகளுக்கான பணத்தையும் செலுத்திவிட்டால், மணல் உரியவரின் வீட்டுக்கு குறுகிய காலத்துக்குள் இறக்கிக்கொடுக்கப்படும் நடைமுறை இருந்தது. அவ்வாறான பொறுப்பு மிகுந்த செயற்பாடு இப்போது இல்லாமல் செய்யப்பட்டுள்ளதால் மக்கள் மணலைப் பெறுவதற்கு பெரும் சிரமப்படுகின்றனர். தற்போது மணல் கொள்ளையர்களிடம் மக்கள் அகப்படும் நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதேபோல் வவுனியாவில் அமையவிருந்த பொருளாதார மத்திய நிலையத்தை எங்கே அமைப்பது என்பதை அரசாங்கம் திட்டமிட்டு அறிவித்தபோதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமக்கிடையேயான அரசியல் போட்டித் தன்மை காரணமாக  ஆளுக்கொரு இடத்தை பரிந்துரை செய்து குழப்பத்தை ஏற்படுத்தியதால் வவுனியா தாண்டிக் குளத்தில் அமைவதாக அரசாங்கம் அறிவித்த பொருளாதார மத்திய நிலையம் இறுதியில் வவுனியாவில் அமைக்கப்படவே இல்லை. இப்போது தமிழ் மக்களுக்கு பயனற்றதாக கருதப்படும் ஒரு இடத்தில் அந்த பொருளாதார மத்திய நிலையத்தை அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரியவருகின்றது.
இவ்வாறு தாமும் பயனுள்ள திட்டங்களை திட்டமிட்டு செய்ய விரும்பாமலும், அமையப் பெறுகின்ற நல்ல திட்டங்களையும் சாதகமாக நடைமுறைப்படுத்த விரும்பாமலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நடத்தும் அரசியல் யுத்தத்தால் அழிந்த எமது பிரதேசத்திற்கும், யுத்தத்திற்கு முகம் கொடுத்த எமது மக்களுக்கும் பயனற்றதாகவே இருக்கின்றது.

Related posts: