தமிழ்த் தலைமைகளின் உண்மை முகம் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. இனியும் நாம் நம்பத் தயாரில்லை : கிளிநொச்சி காணாமல் போன உறவுகள் கடும் விசனம்!

Friday, January 26th, 2018

எமது உறவுகளைத் தொலைத்துவிட்டு எதிர்காலமே சூனியமான நிலையில் வீதியில் ஒரு வருடமாக காத்திருக்கும் எமக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமைகள் எந்தத் தீர்வையும் பெற்றுத்தர போவதில்லை.

அவர்கள் அரசாங்கத்தை பாதுகாப்பதிலும் அரசை சர்வதேச அழுத்தங்களில் இருந்து காப்பதிலும் குறியாக செயற்படுவதாக கிளிநொச்சியில் கடந்த ஒரு வருடமாக வீதியில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல்போன உறவுகள் கவலை வெளியிட்டதுடன் அவர்களின் உண்மை முகம் வெளிவந்துள்ளது.

இனியும் இவர்களை நம்பத் தயாரில்லை எனவும் விசனம் வெளியிட்டனர். கிளிநொச்சியில் கடந்த ஒரு வருட காலமாக காணாமல் போன உறவுகளுக்கு நீதி கோரி வீதியில் போராடும் காணாமல் போனோரின் உறவுகள் கருத்து வெளியிடுகையிலே மேற்படி கருத்தை வெளியிட்டனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில் நாம் எமது உறவுகளுக்காக வீதியில் வருடக்கணக்கில் காத்திருக்கின்றோம். எமக்கு தீர்வைப் பெற்றுத் தருவார்கள் என்று நம்பி வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பியவர்களோ எமது பிள்ளைகளின் தியாகத்தை விலைபேசி விற்கின்றனர்.

தமிழ்த் தேசியம் பேசி காணாமல் போன எமது உறவுகளின் விடயத்தை அரசியலாக்கி எமது அனுதாப வாக்குகளைப் பெற்றவர்கள் இன்று அரசாங்கத்தின் செல்லப்பிள்ளைகளாக அவர்களை பாதுகாப்பதிலும் அரசின் சுகபோகங்களை அனுபவித்து வரும் நிலையில் நாங்கள் அவர்களை இனியும் நம்பத் தயாரில்லை.

கடந்த 8 வருடங்களாக ஏமாற்றி எமது வாக்குகளை பெற்றுக்கொண்டு பாராளுமன்றக் கதிரையில் இருக்கும் தமிழ்த் தலைமைகள் வரவு செலவுத்திட்டத்தின் போது கூட எமது பிரச்சினைகளையோ அரசியல் கைதிகளின் பிரச்சினைகளையோ முன்னிறுத்தாது வெறும் 2 கோடி ரூபாவுக்கு விலை போய்விட்டதாக தற்போது ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் கூட்டமைப்பு உறுப்பினர்களை நம்பி வாக்களித்த எமக்கு அதிர்ச்சியளிக்கிறது. இவ்வாறான நிலையில் இனியும் இவர்கள் தீர்வைப் பெற்றுத் தருவார்கள் என்ற நம்பிக்கை எமக்கில்லை என தெரிவித்துள்ளனர்.

Related posts: