தமிழ்த் தலைமைகளது  தூரநோக்கற்ற செயற்பாடுகளால், தீர்வுக்கான முயற்சிகள் கானல் நீராகிப் போகிறது – டக்ளஸ் தேவானந்தா!

Saturday, August 5th, 2017

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடனான எனது உறவுகள் 1990 களின் ஆரம்பத்தில் இருந்தே ஏற்பட்டது. அக்காலகட்டத்தில் இந்திய இராணுவம் நாட்டிலிருந்து வெளியேறிக்கொண்டிருந்த நேரத்தில் நான் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்து ஜனாதிபதி பிரேமதாச அவர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு தேசிய அரசியல் நீரோட்டத்தில் ஈடுபட்டு வருகின்றேன்.

அக்காலத்திலிருந்து இன்றுவரையிலான சுமார் 3 தசாப்தங்களாக ரணில் விக்கிரமசிங்க அவர்களுடன் நீண்டகால உறவுகளைப் பேணிக் கொண்டிருக்கின்றேன். அவர் ஆளுந்தரப்பினராக, எதிர்த்தரப்பினராக விளங்கிய காலங்களிலெல்லாம் நாம் மிகுந்த புரிந்துணர்வுடன் விடயங்களை முன்னெடுத்திருந்தோம்.

நாட்டின் இனப்பிரச்சினை தொடர்பில் அவரிடம் இருக்கும் தெளிவு மிக உயர்ந்ததாகும். ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்காலத்தில் ஏற்படுத்தப்பட்ட இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை தமிழ்த் தலைமைகள் சரியாக முன்னெடுக்கவில்லை.

சந்திரிக்கா அம்மையார் கொண்டுவந்த தீர்வுத் திட்ட வரைபை அன்று தமிழ்த் தலைமைகள் ஐக்கிய தேசியக் கட்சியை தூண்டிவிட்டுத் தடுத்திராவிட்டால் அதன் பின்னரான அழிவுகளைத் தடுத்து நிறுத்தியிருக்கலாம்.

அடுத்த சந்தர்ப்பமாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் புலிகளுக்குமிடையே நோர்வேயின் அனுசரணையுடன் ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தமாகும் அதைத் தமிழ்த் தலைமைகள் நேர்மையோடு பாதுகாத்துக்கொண்டு தீர்வு நோக்கி முன்னகர்ந்து இருக்கலாம்.

அடுத்ததாக ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க அவர்கள் போட்டியிட்டபோது அந்தச் சந்தர்ப்பத்தில் தேர்தலை புறக்கணிக்காமல் தமிழ்த் தலைமைகள் அவருடன் ஒரு இணக்கத்தை அன்றே ஏற்படுத்தி அவர் ஜனாதிபதியாவதற்கு உதவியிருந்தால் அதன் பின்னரான அழிவு யுத்தத்தைத் தடுத்திருப்பதுடன், எமது மக்கள் எதிர்கொண்ட பாரிய இழப்புக்களையும் தடுத்து நிறுத்தியிருக்கலாம்.இவ்வாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கூடாக தீர்வொன்றைக் காண்டிருக்கலாம்.

இவ்வாறு தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வைக்காண்பதற்கு கிடைத்த நல்ல சந்தர்ப்பங்களை தமிழ்த் தலைமைகள் தூர நோக்கத்துடன் செயற்படுத்தாதன் விளைவானது தீர்வுக்கான முயற்சிகளை காணல் நீராக்கியதுடன், தமிழ்மக்களை பாரிய அழிவுகளுக்கும், துயரங்களுக்கும் இட்டுச் சென்றதுடன், இடம் பெயர்வு மற்றும் புலம் பெயர்வுகளையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது அவர் கொண்டிருக்கக்கூடிய தீர்வுக்கான யோசனைகள் மிகப் பயனுள்ளவை என நாம் அறிவோம்.

அவரது தலைமையில் அமையப் பெற்றுள்ள அரசியலமைப்புச் சபையின் வழி நடத்தல் குழுவில் நானும் அங்கத்துவம் பெறுகின்றேன் என்ற அடிப்படையில் அவரது முயற்சிகள் சாத்தியமாக வேண்டும் என்று விரும்புகின்றேன்.

அதேநேரம் அந்த புதிய அரசியலமைப்பு வரைபானது 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் முன்னோக்கிச் செல்லும் திட்டத்தைவிடச் சிறப்பானதாக அமையுமாக இருந்தால், அவரது யோசனைகளை நாம் நிச்சயம் வரவேற்போம் எனக்கூறிக்கொண்டு, 40 ஆண்டுகால அரசியல் வரலாற்றுப் பூர்த்தியினைக் கொண்டாடும் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு எனதும் எனது கட்சியினதும் தமிழ் மக்களினதும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களின் அரசியல் வாழ்வின் 40 வருடங்களை நிறைவு செய்தது தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு ஆற்றியபோதே தெரிவித்துள்ளார்.

Related posts: