தமிழை இழந்த பின்னர் தமிழர்கள் அடையும் அரசியல் தீர்வு பயனற்றது – நாவலர் விழாவில் இரா.செல்வவடிவேல்!

தமிழ் மொழி கல்வியை மறந்து ஆங்கில மொழி மோகத்தில் தமிழர் தேசம் மூழ்கிக் கிடக்கின்றது. தமிழை இழந்த பின்னர் தமிழர்கள் அடையப் போகின்ற அரசியல் தீர்வு வீணானது எனத் தெரிவித்தார் யாழ்ப்பாணத் தமிழ் சங்கத்தின் உப தலைவர் இரா.செல்வவடிவேல்.
யாழ்ப்பாண தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் நடத்தப்பட்ட நாவலர் தின விழாவில் தலைமை தாங்கி பேசும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
ஆறுமுக நாவலர் மொழி, சமயம், அரசியல் ஆகிய மூன்று துறைகளிலும் தமிழ் மக்களுக்கு மகத்தான சேவைகள் ஆற்றி உள்ளார். இவற்றுள் இவரின் தமிழ் பணி இன்றைய காலத்தின் தேவையாக முதனிலையில் வைத்து பார்க்க வேண்டியுள்ளது.
ஏனென்றால் தமிழ்மொழி கல்வியை மறந்து ஆங்கில மொழி மோகத்தில் தமிழர் தேசம் மூழ்கி கிடக்கின்ற கால கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் எனவும் செல்வவடிவேல் கூறினார்.
பொதுவாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் தமிழ்மொழி கல்வி அருகி செல்கிறது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழியை கற்கின்ற மாணவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு என்பது இதற்கு பொருத்தமான உதாரணம்.
ஈழத்தில் காணப்படுகின்ற நிலைமைதான் இந்தியாவில் தமிழ் நாட்டிலும் நிலவுகின்றது. ஆறுமுகநாவலரால் சிதம்பரத்தில் அமைக்கப்பட்ட சைவப்பிரகாச வித்தியாசாலையில் கற்கின்ற மாணவர்களில் 80 சதவீதமான மாணவர்கள் ஆங்கில மொழியிலேயே கற்கின்றனர். மொத்தத்தில் தமிழ் மொழி தன்னை இழக்கின்ற நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.
எமது நாட்டை பொறுத்த வரை தமிழை இழந்த பின்னர் நாம் அடைய போகின்ற அரசியல் தீர்வு எந்த வகையிலும் பயனற்றது மாத்திரம் அல்ல வீணானதும் ஆகும். சமயம், அரசியல் ஆகியவற்றில் ஏற்படுகின்ற பாதிப்புக்களை விட மொழியில் ஏற்படுகின்ற பாதிப்புக்கள் பாரதூரமானவை ஆகும். இதனை நாம் அனைவரும் உண்மையாக உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.
ஆறுமுகநாவலரை நினைவு கூர்கின்ற நாம் தமிழ்மொழி கல்வியை வளர்த்தெடுக்க ஒற்றுமையாக எழுச்சியுடன் செயற்பட வேண்டும். தமிழ், சமய பாட புத்தகங்களில் ஆறுமுகநாவலரின் பால பாடம், சைவ வினா விடை ஆகியன சேர்க்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
Related posts:
|
|