தமிழில் தேசிய கீதம் பாடியமைக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு வருகிறது!

Thursday, June 2nd, 2016

தேசிய கீதத்தை தமிழில் பாடியமையானது அரசியலைமைப்புச் சட்டத்திற்கு முரணானது என அறிவிக்க கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் ஜூலை 7ம் திகதி விசாரணைக்கு எடுப்பது என உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

களனி பிரதேசத்தை சேர்ந்த மூன்று பேர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

தேசிய கீதத்தை தமிழில் பாட அரசியலமைப்புச் சட்டத்தில் எவ்வித சட்டரீதியான அனுமதியும் வழங்கப்படவில்லை என மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இவ்வாறான நிலையில், கடந்த சுதந்திர தின நிகழ்வில் தமிழில் தேசிய கீதத்தை பாட வேண்டும் என்று அமைச்சரவை எடுத்திருந்த முடிவு அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான செயல் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த தீர்மானத்தின் மூலம் அமைச்சரவை அரசியலமைப்புச் சட்டத்தை மீறியுள்ளது என தீர்ப்பளிக்குமாறு மனுதாரர்கள் உயர்நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்