தமிழர்களின் மரபுரிமைகளை பாதுகாப்பதில் அமைச்சர் டக்ளஸின் பங்கு நிகரற்றது – பேராசிரியர் புஸ்பரட்ணம் எடுத்துரைப்பு!

Sunday, October 10th, 2021

தமிழ் மக்களின் தொல்லியல் மரபுரிமைகளை பாதுகாக்கும் செயற்பாடு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நடவடிக்கையினால் வலுப்படுத்தப்பட்டுள்ளது என்று வரலாற்றுத் துறை பேராசிரியர் புஸ்பரத்தினம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் இடைநிறுத்தப்பட்ட கலாசார சுற்றுலா சிறப்புக் கற்கை நெறியை தொடருவதற்கு நடவடிக்கை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட மெய்நிகர் வழியூடான கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே வரலாற்றுத் துறை பேராசிரியரினால் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக் கழகத்தின் கலாசார சுற்றுலா கற்கைநெறி சார்ந்த மாணவர்கள், விரிவுரையாளர்கள் போன்ற பலர் கலந்து கொண்ட குறித்த கலந்துரையாடலில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த பேராசிரியர் புஸ்பரட்ணம்,

தமிழ் மக்களுடைய வரலாற்றுப் பாரம்பரியங்களும் தொல்லியல் அடையாளங்களும் பாதுகாக்கப்பட வேண்டிய காலச் சூழலின் அவசியம் கருதி யாழ் பல்கலைக் கழகத்தில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த கற்கைநெறியை தொடர்ந்தும் கற்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடந்த காலங்களில் நிகரற்றவாறு இவ்வாறான பல்வேறு நடவடிககைள் மேற்கொண்டமையை சுட்டிக்காட்டினர்.

குறிப்பாக சாவகச்சேரி நீதிமன்றக் கட்டிடத் தொகுதியை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போது, வரலாற்றுச் சின்னமான இந்து ஆலயம் தொடர்பான விவகாரத்தில் தலையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தொல்லியல் மரபுரிமை நிலையம் ஒன்று சாவகச்சேரி பிரதேசத்தில் அமைவதற்கு காரணகர்த்தாவாக இருந்தமையினையும் சுட்டிக்காட்டினார்.

இதன்போது கருத்து தெரிவித்த விரிவுரையாளர்கள், கலாசார சுற்றுலா சிறப்புக் கற்கைநெறி தொல்லியல் மரபுரிமைகளை பேணிப் பாதுகாத்தல், வடக்கு கிழக்கு பிரதேசங்களில் சுற்றுலாத் துறையை விருத்தி செய்தல், தமிழ் மக்களுடைய கலாசார விழுமியங்களை மெருகேற்றுதல் போன்ற விடயங்களை உள்ளடக்கும் வகையில் கலாசார சுற்றுலா சிறப்பு கற்கை நெறிக்கான பாடத் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், எமது எதிர்காலச் சந்ததிகளுக்கு எமது தனித்துவங்களை கொண்டு சேர்ப்பதற்கு இந்தப் கற்கைநெறி வலுச் சேர்க்கும் எனவும் நம்பிக்கை வெளியிட்டனர்.

அத்துடன், பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு என்பது சவாலான விடயமாக இருக்கின்ற சூழலில், சுற்றுலாத் துறை என்பது பொருளாதாரத்தின் பிரதான மார்க்கங்களில் ஒன்றாக இருக்கின்ற இலங்கை போன்ற நாடுகளில் கலாசார சற்றுலாவை சிறப்பு கற்கை நெறியாக கற்பதன் மூலம் வேலை வாய்ப்புக்களை பெற்றுக் கொள்ள முடியும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்த மாணவர்கள், தமக்காக இந்த வாய்ப்பினை மீண்டும் பெற்றுத் தந்த அமைச்சருக்கு நன்றியுள்ளவர்களாக இருப்போம் எனவும் தெரிவித்தனர்.

இந்நிலையில் கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

மக்களோடு வாழ்ந்நு மக்களின் பிரச்சினைகளைப் புரிந்து கொண்டு அவற்றை தீர்த்து வைக்கக் கூடியவர்களை மக்கள் தெரிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், கடந்த காலங்களில் சரியானவர்களின் கைகளில் அதிகாரங்கள் கிடைக்காமையினாலேயே தமிழ் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், கடந்த காலங்களில் எமது தலைமைகளின் தவறான அணுகுமுறைகள் காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்களையும் சுட்டிக் காட்டிய கடற்றொழில் அமைச்சர், அனுபவங்களை படிப்பினையாகக் கொண்டு எதிர்காலத்தில் தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

ஊடகப் பிரிவு: கடற்றொழில் அமைச்சர் – 10.10.2021

Related posts: