யாழ்ப்பாணத்தில் சிங்களவருக்கும் உரிமை உண்டு – யாழ். மாநகர முதல்வர் ஆர்னோல்ட் வலியுறுத்து!

யாழ் மாநகர எல்லைக்குள் தமிழருக்கு மட்டும்தான் காணி நிலங்களோ அன்றி கட்டடங்களோ வழங்கப்படவேண்டும் என்ற சட்டவரையறை எதுவும் கிடையாது. ஏனைய தென்னிலங்கையைச் சேர்ந்த எவரும் வந்து இங்கு தமது செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும். இது தமிழருக்கு மட்டுமான பகுதி அல்ல என யாழ் மாநகரசபை முதல்வர் ஆர்னோல்;ட் வலியுறுத்தியுள்ளார்.
இன்றையதினம் மாநகர சபையில் யாழ் நகரக்குளப் பகுதி புதிய கட்டடத் தொகுதி விவகாரம் தொடர்பில் விஷேட விவாதம் நடைபெற்றது. இதன்போது குறித்த கடைத்தொகுதி கட்டட ஒப்பந்தத்தை தமிழ் நபர் ஒருவருக்கு வழங்கியமை ஏன் என சபையில் யாழ் மாநகரின் முன்னாள் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜாவை நோக்கி கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
இதற்கு பதிலளித்த யாழ் மாநகரின் முன்னாள் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா யுத்தம் நிறைவடைந்த பின்னர் தமிழ் பிரதேசங்களில் தமது கால்களை ஊன்றுவதற்காக தென்னிலங்கையைச் சேர்ந்த பலர் முண்டியடித்தவண்ணம் இருந்தனர். ஆனால் நாம் எமது பிரதேசத்தில் எமது மக்களே வாழவேண்டும் எமது மக்களே தமது முதலீடுகளை செய்யவேண்டும் பிறருக்கு வழங்குவதனூடாக எமது தேசத்தின் ஆளுகையை வேற்றினத்தவருக்கு வழங்குவதை நாம் விரும்பாததன் காரணமாகவே இப்பகுதியை கோரிய தமிழ் நபருக்கு ஒப்பந்தம் வழங்கியிருந்தோம்.
இது எமது கட்சியின் நிலைப்பாடான “எமது நிலம் எமது மக்களுக்கே சொந்தம்” என்பதற்கிணங்கவே முன்னெடுக்கப்பட்டது. இதில் என்ன தவறுள்ளது? என பதில் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த மாநகரின் முதல்வர் ஆர்னோல்ட், யார்; கூறியது இந்த மாநகரின் நிலங்கள் கட்டடங்கள் தமிழருக்கு மட்டும் தான் உரித்துடையது என்று. இப்பகுதி வேற்றினத்தவரும் வந்து தமது வியாபார நடவடிக்கைகளையும் வாழிடங்களையும் அமைப்பதற்கு உரித்தானது. அதை தடுப்பாதற்கான சட்டவரைமுறை இச்சபையில் கிடையாது என வலியுறுத்தினார்.
முதல்வரின் இக்கருத்தால் சபையில் இருந்த உறுப்பினர்கள் பெரும் அதிர்ச்சியடைந்ததுடன் தன்னிச்சையாக செயற்பட்டுவரும் முதல்வர் ஆர்னோல்ட் தனது ஆட்சிக்காலத்தில் யாழ் மாநகரசபை ஆளுகைக்குள் பல திட்டங்களை தென்னிலங்கையை சேர்ந்தவர்களுக்கு வழங்க முயற்சிக்கின்றாரோ என்றும் இதுதான் இவர்கள் பேசும் போலித் தேசியத்தின் உண்மை முகம் என்றும் பேசிக்கொண்டதை சபை வளாகத்தில் அவதானிக்க முடிந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|