தமது பாதுகாப்பை பொதுமக்கள் தாமே உறுதி செய்ய வேண்டும் – பொலிஸ் அதிகாரி!

Saturday, December 15th, 2018

பொதுமக்கள் தமது பாதுகாப்பினைத் தாமே உறுதிப்படுத்திக் கொள்ளும் பட்சத்தில் சட்டவிரோதச் செயற்பாடுகள் இடம்பெறுவதனைத் தவிர்த்துக்கொள்ள முடியும் என்று சாவகச்சேரி பொலிஸ் அதிகாரி கே.எம்.கோணார தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:

தற்போது எமது சமூகத்தில் பல்வேறுபட்ட பிரச்சினைகள் தலைதூக்கியுள்ளன. இவ்வாறான பிரச்சினைகளை கட்டுக்குள் கொண்டுவர வேண்டுமாக இருந்தால் பொதுமக்கள் ஒவ்வொருவரும் தமது பாதுகாப்பினைத் தாமே உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

தற்போது இளைஞர்கள் உட்படப் பலரும் தலைக்கவசம் இன்றிப் பயணிக்கின்றனர். அதில் சிலர் மதுபோதையிலும் பயணிக்கினறனர். ஒருபோதும் பொலிஸாருக்காக தலைக்கவசம் அணியக் கூடாது. உங்கள் பாதுகாப்பின் பொருட்டே அணிய வேண்டும்.

அத்துடன் பெரும்பாலான பெண்கள் தனிமையில் வெளியில் செல்லும் போது பெறுமதியான தங்க ஆபரணங்களை அணிந்து செல்கிறார்கள். எமக்குப் பாதுகாப்பு இல்லையென உணரும் பட்சத்தில் தங்க ஆபரணங்கள் அணிந்து செல்வதனைத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக கவரிங் நகைகளை அணிந்து கொள்ள முடியும்.

அத்துடன் பல இடங்களில் வீடு மற்றும் வர்த்தக நிலையங்களின் மேல் கூரை மற்றும் கதவுகள் பாதுகாப்பானதாக இல்லை. இதுவே திருடர்களுக்கு சந்தர்ப்பமாக அமைந்து விடுகின்றது. நாம் ஒருபோதும் தவறு இடம்பெறுவதற்கு வழிவகுத்துக் கொடுக்கக்கூடாது. இயன்றவரை எமது பாதுகாப்பினைப் பலப்படுத்தி பாதுகாப்பாக வாழ்வதற்கு முயற்சிக்க வேண்டும்.

எமது சமூகத்தில் உள்ள மிகப்பெரிய பிரச்சினை மதுபோதையில் வாகனம் செலுத்துதல். இவ்வாறானவர்கள் தாமாக உணர்ந்து இவ்வாறான செயற்பாடுகளைத் தவிர்க்க வேண்டும். மதுபோதையில் சாரத்தியம் செய்வதால் தமது உயிருக்கு தாமே ஆபத்தைத் தேடுவதுடன் தவறு செய்யாத இன்னொருவருக்கும் ஆபத்தை ஏற்படுத்துகின்றனர். என்றார்.

Related posts: