தபால் புகையிரதம் மீது கல்வீச்சு: 3 பெட்டிகள் சேதம்!

நேற்றையதினம் (9) இரவு யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட இரவு நேர தபால் புகையிரதம்மீது கிளிநொச்சி புகையிரத நிலையத்திற்கு சமீபமாக கடுமையான கல்வீச்சு நடத்தப்பட்டதில் மூன்று பெட்டிகள் சேதமடைந்துள்ளதுடன் சில பயணிகள் காயமடைந்துதுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் தரித்துவிட்டு புறப்பட்ட சிறிது நேரத்தில் புகையிரத பாதைக்கு சற்றுத் தள்ளி நிகழ்வொன்று இடம்பெற்ற இடத்திலிருந்தே இந்த கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டதாகப் பயணிகள் தெரிவித்துள்ளனர்.
புகையிரதம் புறப்பட்டு வேகம் எடுக்கத் தொடங்கியபோது புகையிரத இடப்புறத்தில் இந்த கல்வீச்சு நடத்தப்பட்டுள்ளது. இதனால் புகையிரதத்தின் மூன்று பெட்டிகளின் ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கியதுடன் கற்கள் பெட்டிகளினுள்ளும் வீழ்ந்துள்ளன.
பெரிய கருங்கற்களே இவ்வாறு வீசப்பட்டுள்ளன. இதில் சில பயணிகள் காயமடைந்துள்ளனர்.
இந்தத் தாக்குதல் நடந்தபோது அச்சமடைந்த வயோதிப் பெண்ணொருவர் தனது தலையைக் கைகளால் பொத்தியபோது பெரிய கருங்கற்கள் அவரது கையைத் தாக்கியதில் விரல் பகுதிகள் பலத்த காயமடைந்துள்ளன.
இரவு 8.30 மணியளவில் நடந்த இந்தத் தாக்குதல் சம்பவத்தால் புகையிரத பெட்டிகளிலிருந்த ரிக்கெட் பரிசோதகர்கள் இதுபற்றி உரிய தரப்புக்கு அறிவித்ததுடன் கிளிநொச்சி மற்றும் மாங்குளம் புகையிரத நிலையப் பொறுப்பதிகாரிகளிடம் முறையிடப்பட்டுள்ளது. வடக்கில் புகையிரத பெட்டிகள்மீது ஒரே தடவையில் இவ்வாறானதொரு மோசமான கல்வீச்சுச் சம்பவம் இடம்பெற்றமை இதுவே முதல் தடவையெனவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த இரு தினங்களுக்கு முன் கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி வந்த புகையிரதம் மீது அநுராதபுரம் பகுயில் நடத்தப்பட்ட கல்வீச்சில் உதவிக் கல்விப் பணிப்பாளர் ஒருவர் தலையில் படுகாயமடைந்து கோமா நிலைக்குச் சென்று பின் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|