தபால் பணியாளர்கள் சேவைப் புறக்கணிப்பு – பொதுமக்கள் பெரும் சிரமம்!

image_32ba4603b8 Wednesday, June 13th, 2018

தபால் திணைக்களப் பணியாளர்கள் வடக்கு உட்பட நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை நேற்று முன்னெடுத்தனர். ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி இந்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது. தபால் சேவைகள் தடைப்பட்டால் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

தபால் திணைக்களத்துக்கு உரித்தான ஆள்சேர்ப்பு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். பதவி உயர்வுகளுக்கு உரிய முறையில் சம்பளம் வழங்கப்பட வேண்டும். சிற்றூழியர்களாக இருந்து பதவி உயர்ந்தவர்களுக்கு சிற்றூழியர்களுக்கான சம்பளம் வழங்கப்படுகின்றது.

அது அதிகரிக்கப்பட வேண்டும். சில பதவி நியமனங்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்படவில்லை. அவற்றை வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே நேற்று முன்தினம் மாலை முதல் தபால் திணைக்களப் பணியாளர்கள் தொழில் சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பில் பல தடவைகள் கோரிக்கை விடுக்கப்பட்டும் அது கவனத்திற் கொள்ளப்படவில்லை. தமது கோரிக்கைகளுக்குத் தீர்வு கிடைக்கும் வரை பணிப்புறக்கணிப்புப் போராட்டம் தொடரும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களிலும் கிழக்கு மாகாணத்திலும் தபால் சேவைகள் முற்றாகத் தடைப்பட்டன. தபால் நிலையங்களுக்கு சேவைகளைப் பெறச் சென்ற மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதை அவதானிக்க முடிந்தது.

அவசரக் கடிதங்களை அனுப்புவோரும் மாதாந்த உதவிப் பணம் பெறும் முதியவர்களும் செய்வதறியாது அலைந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.

அதேவேளை தபால்திணைக்களப் பணியாளர்களின் விடுவிப்புகள் அனைத்தும் தபால்மா அதிபரால் இரத்துச் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.

பணியாளர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடும் நிலையில் இந்த அறிவிப்பு விடுவிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கத்தினரும் கடந்த வாரம் இருநாள் அடையாள பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

12 வருடங்களாக நிகழும் அஞ்சல் சேவைப் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வு வழங்கவேண்டும். 5 வருடங்கள் கடந்த 2 ஆம் வகுப்பு நியமனங்களை உடனடியாக உறுதிசெய்ய வேண்டும், கணினித் தொழில்நுட்பக் கோளாறுகளைச் சீர்செய்ய வேண்டும் போன்ற 7 கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.