தபால் சேவை முடங்கியது!

Tuesday, June 27th, 2017

தபால் சேவை ஊழியர்கள் நாடுதழுவிய பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளதன் காரணமாக தபால் சேவை முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளது.

ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் ஏற்பாட்டில் இப் போராட்டம் நேற்று நள்ளிரவு முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நுவரெலியா கண்டி காலி ஆகிய தபாற் காரியாலயங்களை உல்லாச பயணத்துறைக்கு பயன்படுத்தும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்தும்இ கொழும்பு பிரதான தபால் காரியாலய கட்டிடத்தில் மீண்டும் தபால் காரியாலயத்தை ஆரம்பிக்காமை மற்றும் ஊழியர் சட்டமூலத்தை திருத்தி நடமுறைப்படுத்தாமை உள்ளிட்ட நிர்வாகத்தில் உள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையிலே இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வடக்கில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு வவுனியா மன்னார் என சகல மாவட்டங்களிலும் தபால் நிலையங்கள் மற்றும் உப தபால் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதோடு தபால்கள் விநியோகிக்கப்படாமல் தேங்கிக் கிடப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒன்றிணைந்த தபால் சேவை தொழிற்சங்கத்தால் கடந்த 12ஆம் திகதி முதல் 48 மணிநேர பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில்  கடந்த சனிக்கிழமை தபால் சேவை அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எனினும்  இக் கலந்துரையாடல் வெற்றியளிக்காத காரணத்தால் நாடு முழுவதும் தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுப்பதாக ஐக்கிய தபால் வர்த்தக தொழிற் சங்கத் தலைவர் சிந்திக பண்டார தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் தற்போது உயர்தரம் சித்திபெற்ற மாணவர்களது பல்கலைக்கழக அனுமதிக் கடிதங்கள் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கும் மஹபொல புலமைப்பரிசில் கடிதங்கள் போன்றன தேங்கும் நிலை காணப்படுவதனால் பல்கலைக்கழகத்திற்கு தெரிவானவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் பல்கலைக்கழக பிரவேசம் தாமதமாகலாம் எனவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவ்வேலை நிறுத்தத்தினை முடிவுக்கு கொண்டுவர உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்..

Related posts: