தபாலகங்கள் மூலம் இலத்திரனியல் கழிவுகளை சேகரிக்க தீர்மானம் – மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் தெரிவிப்பு!
Wednesday, September 9th, 2020நாட்டிலுள்ள இலத்திரனியல் கழிவுகளை தபால் அலுவலகங்கள் ஊடாக சேகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதற்காக தபால் ஊழியர்களை ஈடுபடுத்தவுள்ளதாகவும் மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
இவ்வாறு சேகரிக்கப்படும் இலத்திரனியல் கழிவுகளை, வெளிநாடுகளுக்கு அனுப்பி அவற்றை மீள் சுழற்சி செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் எஸ். சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
கையடக்கத் தொலைபேசிகள், வானொலிகள், தொலைக்காட்சி பெட்டிகள் உள்ளிட்டவை ஈ வேஸ்ட் எனப்படும் இவ்வாறான இலத்திரனியல் கழிவுகளில் அடங்குகின்றன.
இலத்திரனியல் கழிவுகளை முகாமைத்துவப்படுத்தும் செயற்பாடுகள் இலங்கையில் இதுவரை வெற்றிகரமாக முன்னெடுக்கப்படவில்லை எனவும் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் எதிர்வரும் ஒக்டோபர் 10 ஆம் திகதி கொண்டாடப்படும் சர்வதேச தபால் தினத்தை முன்னிட்டு, தபால் மா அதிபர் உள்ளிட்ட தபால் திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களும் ஒன்றிணைந்து இலத்திரனியல் கழிவு முகாமைத்துவ செயற்றிட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு வார காலத்திற்கு இலத்திரனியல் கழிவுகளை சேகரிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் எஸ். சமரசிங்க மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|