தனியார் பேருந்தை கடத்த முற்பட்டவர் வசமாக மாட்டினார்!

Saturday, December 2nd, 2017

மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்துக்குப் பயணிகளை ஏற்றி இறக்கும் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்தைக் கடத்திச் செல்ல முற்பட்ட குற்றச்சாட்டில் பொம்மை வெளியைச் சேர்ந்த ஒருவர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.

குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. இதன்போது யாழ்ப்பாணம் கொட்டடிப்பகுதியில் வைத்து குறித்த பேருந்து மீட்கப்பட்டது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;

ஈ.ஆர்.7811 இலக்க மன்னார் மாவட்டத்துக்குச் சொந்தமான பேருந்து மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு பயணிகளை ஏற்றிவந்தது. பயணிகள் அனைவரையும் யாழ்ப்பாணத்தில் இறக்கிவிட்டு யாழ்ப்பாணம் முற்றைவெளிப்பகுதியில் பேருந்தை நிறுத்திவிட்டு சாரதியும் நடத்துநரும் மதிய போசனத்திற்காக உணவகம் ஒன்றிற்குச் சென்றனர்.

இதனை அவதானித்த பொம்மைவெளிப்பகுதியைச் சேர்ந்த ஓர் இளைஞர் நிறுத்தி வைத்திருந்த குறித்த பேருந்தை திறப்பு இன்றி களவாடிச் சென்றார். சென்ற நிலையில் சகதியில் பேருந்து புதையுண்டது. புதையுண்ட சமயம் அந்தப் பகுதியால் பயணித்த ஏனைய பேருந்து உரிமையாளர்கள் பேருந்தின் சாரதியோ அல்லது நடத்தநரோ இன்றி பிறிதொருவர் பேருந்தைச் செலுத்துவதைக் கண்டு சந்தேகமடைந்து சாரதிக்கு தொலைபேசி அழைப்பு எடுத்தபோதே சாரதி நிலமையை அறிந்து சம்பவ இடத்துக்கு ஓடிச் சென்றார். இதன் போது பேருந்தினைக் களவாட முயன்றவர் கையும் களவுமாக வகையாக மாட்டிக்கொண்டார். பொலிஸாரை அழைத்து களவாட முயன்றவரை ஒப்படைத்தனர். பணம், நகை, சைக்கிள், மோட்டார்சைக்கிள் எனக் களவாடிய நிலையில் பட்டப்பகலில் பேருந்தையும் களவாட முயன்றமை யாழ்.நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts: