தனியார் நிறுவனத்திற்கு அனுமதி வழங்குவது, இலங்கையின் சுற்றுலாத்துறையை பாதிக்கும் – சுற்றுலா முகவர் நிறுவனங்களின் சம்மேளனம் ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டு!

Sunday, May 5th, 2024

சுற்றுலாப் பயணிகளுக்கு விசா வசதிகளை வழங்க தனியார் நிறுவனத்திற்கு அனுமதி வழங்குவது, இலங்கையின் சுற்றுலாத்துறையை பாதிக்கும் என சுற்றுலா முகவர் நிறுவனங்களின் சம்மேளனம் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளது.

சுற்றுலா முகவர் நிறுவனங்களின் சம்மேளனம், ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய முறைமையின் கீழ் விசா கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டதன் காரணமாக, ஆசியாவிலேயே அதிக விசா கட்டணம் அறவிடும் நாடாக இலங்கை தற்போது மாறியுள்ளதாகவும், அக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2012ஆம் ஆண்டு ETA என்ற Electronic Travel Authorization முறை அறிமுகப்படுத்தப்பட்டு விசா கட்டணம் அறவிடப்பட்டது.

அதன்படி, அவ்வப்போது விசா கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டு, இவ்வாண்டு ஆரம்பத்தில், இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணி ஒருவரிடமிருந்து அதிகபட்சமாக 60 அமெரிக்க டொலர் அறவிடப்பட்டது.

எவ்வாறாயினும், இந்தச் செயற்பாட்டை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திலிருந்து நீக்கி தனியார் நிறுவனம் ஒன்றுக்கு அமைச்சரவையின் அனுமதியுடன் மாற்றுவதற்கு அரசாங்கம் அண்மையில் நடவடிக்கை எடுத்திருந்தது.

அதன்படி, முதலில் ஒன்லைன் வசதி மூலம் விசா வசதியும், பின்னர் ON ARRIVAL விசா வசதியும் அந்த தனியார் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது.

அதனுடன் இதுவரையில் ON ARRIVAL விசா வசதியை வழங்கிய அரசாங்க இணையத்தளமான www.eta.gov.lk முடக்கப்பட்டு அதற்கு பதிலாக www.srilanka e-visa.lk என்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான புதிய இணையத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதன் கீழ், இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு 30 நாள் விசாவிற்கு இதுவரை அறவிடப்பட்ட 60 டொலர் கட்டணம், 100.5 டொலராக அதிகரிக்கப்பட்டது.

அதில், 75 டொலர் அரசாங்கத்துக்கும், மீதி 25.5 டொலர் தனியார் நிறுவனத்துக்கும் சொந்தமாகும்.

இவ்வாறானதொரு நிலையில், தாய்லாந்து, வியட்நாம் மற்றும் இலவச விசா வழங்கும் அல்லது குறைந்த கட்டணத்தை அறவிடும் போட்டி இடங்களுடன் ஒப்பிடும் போது, சுற்றுலாப் பயணிகளுக்கு குறிப்பிடத்தக்க தடையை உருவாக்கி, ஆசியாவிலேயே அதிக விசா கட்டணங்களைக் கொண்ட நாடாக இலங்கை மாறியுள்ளதாக சுற்றுலா முகவர் நிறுவனங்களின் சம்மேளனம், ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: