தனியார் துறை ஊழியர்களின் நலன் கருதி வடக்கு மாகாண தனியார் வர்த்தக ஊழியர் சங்கம் மீள ஆரம்பம்!
Monday, July 27th, 2020வடக்கு மாகாணத்தில் வர்த்தக நிலையங்களில் கடமையாற்றும் ஊழியர்களின் நலன்களைப் பாதுகாக்கும் முகமாக வடக்கு மாகாண தனியார் வர்த்தக ஊழியர் சங்கம் யாழ்ப்பாணத்தில் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் ரிம்பர் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை குறித்த சங்கத்தின் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதன்போது குறித்த சங்கத்தின் உபதலைவர் பா.லக்சன் தெரிவித்துள்ளதாவது, “இனிவரும் காலங்களில் அரச துறைகளில் பணியாற்றும் ஊழியர்களை போல தனியார் துறையில் பணியாற்றும் ஊழியர்களின் நலன்களைப் பேணும் முகமாக இந்த அமைப்பு செயல்படும்.
இந்த அமைப்பு ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு வர்த்தக சங்கம் மற்றும் வேறு பல தடைகள் காரணமாக செயற்பட முடியாதிருந்தது. எனினும் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள சங்கம் தொடர்ச்சியாக எந்த தடை ஏற்படினும் செயற்படும்.
குறிப்பாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தூர இடங்களிலிருந்து வந்து தனியார் வர்த்தக நிலையங்களில் கடமையாற்றும் பெண்கள் 5 மணிக்குப் பின்னரும் கடமையில் ஈடுபடுத்தப்படுகின்ற நிலை காணப்படுகின்றது. எனினும் அவர்களுடைய நலன் தொடர்பில் இதுவரை எவரும் கவனம் செலுத்தவில்லை
அத்தோடு அரச சேவையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பொது விடுமுறை மற்றும் சனி ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்கும் நிலை காணப்படுகின்றது. தனியார் துறையினருக்கு அவ்வாறான விடுமுறைகள் வழங்கப்படுவதில்லை. இனிவரும் காலங்களில் இது தொடர்பில் ஊழியர் சங்கம் கூடிய கரிசனை செலுத்தும்” என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|