தனியார் துறையினருக்கும் சட்டத்தின் ஊடாக சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அரசாங்கத்திடம் தொழிற்சங்கங்கள் கோரிக்கை!

அரச துறையைப் போன்று தனியார் துறையினருக்கும் சட்டத்தின் ஊடாக சம்பளத்தை அதிகரிக்குமாறு தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.
எங்களின் அனுபவத்தின் படி தனியார்துறை ஊழியர்களின் சம்பளத்தை உயர்துவதற்கான கோரிக்கை விடுப்பதன் மூலம் எதிர்பார்த்த முடிவுகளைப் பெற முடியாது என்றும் சட்டரீதியாக முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் சுதந்திர வர்த்தக வலய பொது ஊழியர் சங்கத்தின் செயலாளர் அன்டன் மார்கஸ் தெரிவித்துள்ளார்.
அரசதுறை ஊழியர்களுக்கு மாதாந்தம் 5000 ரூபா கொடுப்பனவை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்றையதினம் அறிவித்திருந்தார்.
இதன்போது தனியார் துறையினருக்கான சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடுமாறு தொழில் அமைச்சருக்குப் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாகவும் ஊடகவி யலாளர் சந்திப்பின் போது நிதியமைச்சர் தெரிவித்திருந்தார்.
தேசிய தொழிலாளர் ஆலோசனைக் குழுவைக் கூட்டி, சட்டக் கட்டமைப்பின் மூலம் தனியார் துறையின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான பொறிமுறையை உருவாக்கும் பொறுப்பு தொழிலாளர் அமைச்சருக்கு உள்ளது.
டிசம்பரில் சபை கூடியபோது, தனியார்துறை ஊழியர்களின் நாளாந்த ஊதியத்தை 1,000 ரூபாவாகவும், குறைந்தபட்ச மாத ஊதியத்தை 26,000 ரூபாவாகவும் உயர்த்துவது தொடர்பான கலந்துரையாடலின் போது முத்தரப்பு உப குழுவை நியமிப்பதற்கு முடிவு எடுக்கப்பட்டது.
தொழிற்சங்கம், தொழிலாளர் அமைச்சர் மற்றும் தேசிய தொழிலாளர் ஆலோசனைக் குழுவைச் சந்தித்து இது தொடர்பாக நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டும் என்றும் தனியார்துறை ஊழியர்களுக்கு சட்டபூர்வ வழிகளில் மட்டுமே சம்பள உயர்வு வழங்க முடியும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|