தடகளப் போட்டி பரிசளிப்பு விழாவைப் புறக்கணித்த மகாஜனக் கல்லூரி அதிபருக்கு எதிராக நடவடிக்கை – வடக்கு கல்விப் பணிப்பாளர் !

Thursday, July 12th, 2018

வடமாகாணத் தடகளப் போட்டிகளின் பரிசளிப்பு விழாவைப் புறக்கணிப்புச் செய்து சென்ற மகாஜனக் கல்லூரியின் செயற்பாடு தொடர்பில் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வடமாகாணக் கல்விப் பணிப்பாளர் எஸ்.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை திணைக்களத்தின் ஏற்பாட்டிலட 11 ஆவது வடமாகாண தடகளப் போட்டிகள் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் கடந்த 6 ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வரையில் நடைபெற்றன.

இந்த தடகளப் போட்டிகளின் இறுதிநாளான 10 ஆம் திகதி மகாஜனக் கல்லூரியின் வீரர் ஒருவர் போட்டியில் பங்குபற்றுவதற்கு போட்டி ஏற்பாட்டாளர்கள் தடை விதித்தனர். குறித்த போட்டியாளர் பாடசாலையை விட்டு விலகியிருந்தார் உள்ளிட்ட காரணங்கள் கூறப்பட்டு அவரை போட்டியில் பங்குபற்றுவதற்கு அனுமதியளிக்கவில்லை.

இதனால் முரண்பட்டுக்கொண்ட மகாஜனக் கல்லூரியினர் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழா நிகழ்வில் பங்கேற்காது புறக்கணிப்புச் செய்தனர். மேலும் விருந்தினர்களை அழைத்து வரும் இனியம் இசைக்குழுவும் மகாஜனக் கல்லூரியின் குழுவே அழைக்கப்பட்டிருந்தது. அவர்கள் துரையப்பா விளையாட்டரங்கிற்கு வருகை தந்து மேற்படி முரண்பாட்டால் அதில் கலந்துகொள்ளாமல் திரும்பிச் சென்றனர்.

இது விடயம் தொடர்பில் அங்கு பிரசன்னமாகியிருந்த வடமாகாண கல்விப் பணிப்பாளர் கேட்டபோது இது தொடர்பில் உரிய முறையில் விசாரணை செய்து அதிபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பாடசாலைகளின் தரவரிசையில் பெண்கள் பிரிவில் மகாஜனக் கல்லூரியே முதலிடம் பெற்றிருந்ததுடன் விலகாமம் கல்வி வலயம் இரண்டாமிடத்தைப் பெற்றுக்கொள்வதில் அதிகளவு புள்ளிகளை பெற்றுக்கொடுத்தல், மகாஜனக் கல்லூரி வீர, வீராங்கனைகளின் பங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: