தகுதி வாய்ந்த அதிகாரி நியமிக்க அமைச்சர் உத்தரவு – விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர!

Tuesday, April 4th, 2017

இலங்கை பட்மிண்டன் சங்கத்தை செயற்பாடுகளற்ற சங்கமாகக் கருதி, அதன் நிர்வாகத்தை தகுதி வாய்ந்த அதிகாரியிடம் ஒப்படைக்க உள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். எதிர்காலத்தில் நடைபெறவுள்ள ‘ஜனாதிபதி விளையாட்டுத்துறை விருது வழங்கல் விழா’ தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, விளையாட்டுத்துறை அமைச்சில் நடைபெற்றது.

அண்மையில் நடத்தப்பட்ட இலங்கை பட்மிண்டன் சங்கத் தேர்தல் தொடர்பில் இதன்போது ஊடகவியலாளர்கள் விளையாட்டுத்துறை அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர்.

இதற்கு அவர் பின்வருமாறு பதிலளித்தார்,

சட்டத்திற்கு அமைவாக சகல பிரச்சினைகளையும் தீர்த்துக்கொண்டு கணக்காய்வு அறிக்கையையும் பெற்று மே 31 ஆம் திகதிக்கு முன்னர் இதனைச் செய்திருக்கலாம். 8 வருடங்களாக பட்மிண்டன் சங்கம் நிதி அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. கணக்காய்வாளரை எவ்வாறு குற்றஞ்சாட்ட முடியும்? 1973 – 25 ஆம் இலக்கத்தில் 33 ஆவது சரத்திலுள்ள சட்டத்தின் கீழ் செயற்பாடுகளற்ற சங்கம் தொடர்பாகவோ அல்லது செயற்படாதிருக்கும் சங்கமாகவோ தான் பட்மிண்டன் சங்கத்தை தற்போது எம்மால் கருத முடியும்.

அதற்கமைய, நம்பிக்கைக்குரிய அதிகாரி ஒருவரை அல்லது அதிகாரமுள்ள அதிகாரி ஒருவரை உடனடியாக நியமித்து, அவரது நிர்வாகத்தின் கீழ் பட்மிண்டன் சங்கத்தின் செயற்பாடுகளை முன்னெடுத்து, தேர்தலை நடத்துவதென நான் தீர்மானித்துள்ளேன். உடனடியாக திகதியை நிர்ணயித்து கணக்காய்வாளருடன் கலந்தாலோசித்து, 8 வருட கணக்காய்வு அறிக்கையைப் பெற்றுக்கொள்வது குறித்து ஆராய்ந்து, அதற்கமைய தேர்தலுக்கான பணிகளை முன்னெடுக்கவுள்ளோம்.

அமைச்சரின் இந்தத் தீர்மானத்திற்கு அமைவாக அண்மையில் நடத்தப்பட்ட தேர்தல் செல்லுபடியற்றதாகும்.பட்மிண்டன் சங்கத்தின் தலைவராக சுராஜ் தந்தெனிய செயற்படுவதுடன், ஓய்வுபெற்ற விங் கமாண்டர் அமல் டயஸ் செயலாளராகவும் ருவன் கால்லகே பொருளாளராகவும் உள்ளனர்.

அமைச்சரின் கருத்து தெரிவிக்கையில்: பட்மிண்டன் சங்கத் தலைவரிடம் வினவியபோது, அது தமக்குத் தெரியாது என அவர் பதிலளித்தார்.

இலங்கை அனுசரணை வழங்கிய 2011 ஆம் ஆண்டு உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடரின் போது, இலங்கையின் அலுவலகப் பணிப்பாளராக செயற்பட்ட சுராஜ் தந்தெனியவிற்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.

போலி நுழைவுச்சீட்டுகளை விநியோகித்த குற்றச்சாட்டும் அதில் உள்ளடங்குகின்றது.

பின்னர், மஹிந்தானந்த அளுத்கமகே விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த காலப்பகுதியில், விசேட அனுமதியுடன் பட்மிண்டன் நிர்வாகத்தில் இணைந்த சுராஜ் தந்தெனிய, 4 வருடங்களாக பட்மிண்டன் சங்கத்தின் தலைவர் பொறுப்பை வகித்துள்ளார்.

Related posts: