தகுதியான 5,800 இலங்கையர்களுக்கு கொரிய வேலைவாய்ப்பு வழங்கப்படும் – வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவிப்பு!

Saturday, June 4th, 2022

அடுத்த 6 மாதங்களுக்குள் கொரிய வேலைவாய்ப்பு தகுதியுடைய 5,800 விண்ணப்பதாரர்கள் தென் கொரியாவுக்கு அனுப்பப்படுவார்கள் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரிய மனிதவளத் திணைக்களத்தின் பணிப்பாளரும் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதியுமான லீ சு சுல் மற்றும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோருடனான சந்திப்பின் போதே இந்தத் தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் கொரியாவிற்கு வேலைக்காக செல்லத் தகுதியுடைய இலங்கைப் பணியாளர்களை பணியமர்த்துவதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

கொரிய மனிதவளத் துறையின் வதிவிடப் பிரதிநிதி, இந்தப் பிரச்சினைக்கு சாதகமான தீர்வை வழங்க ஒப்புக்கொண்டதுடன், அடுத்த ஆறு மாதங்களுக்குள் 5,800 தகுதி வாய்ந்த நபர்கள் தென் கொரியாவுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் உறுதியளித்தார்.

அதன்படி, வாரத்துக்கு ஒரு விமானம் மூலம், 200 இலங்கை வெளிநாட்டு ஊழியர்கள் அடுத்த வாரம் முதல் கொரியாவுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர். அதன் பின்னர் வாரத்திற்கு இரண்டு விமானங்களாக அதிகரிக்கப்படும்.

இலங்கையர்களுக்கு மேலும் கொரிய தொழில் வாய்ப்புகளை வழங்குமாறு அமைச்சர் நாணயக்கார கோரிய போது, இந்த விடயம் தொடர்பில் வதிவிடப் பிரதிநிதியிடமிருந்து தமக்கு சாதகமான பதில் கிடைத்ததாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: