டொலர் தட்டுப்பாட்டுக்கு தீர்வுகாண நடவடிக்கை – திங்களன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டம் தீர்மானிக்கும் என எதிர்பார்ப்பு!

Saturday, December 11th, 2021

நாட்டில் ஏற்பட்டுள்ள அமெரிக்க டொலர் தட்டுப்பாட்டுக்கு தீர்வாக சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதா இல்லையா என்பது சம்பந்தமாக நாளைமறுதினம் திங்கள்கிழமை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதேநேரம் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வது தொடர்பில் அரசாங்கத்திற்குள் இரண்டு நிலைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனடிப்படையில் டொலர் தட்டுப்பாட்டுக்கு உடனடியான தீர்வாக, சர்வதேச நாணய நிதியத்திடம் செல்ல வேண்டும் என்பது சிலரது நிலைப்பாடு. எனினும் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடினால், பல்வேறு நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு ஆக வேண்டும் என்பது மேலும் சிலரது நிலைப்பாடாக இருந்து வருகிறது.

இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நாளைமறுதினம் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பில் விரிவாக கலந்துரையாடி இறுதி தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டின் பொருளாதாரம் மற்றும் நிதி நிலைமை தொர்டர்பாக அமைச்சரவைக்கு தெளிவுப்படுத்துவதற்காக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி எஸ்.ஆர். ஆட்டிகல ஆகியோரும் நாளைமறுதினம் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துக்கொள்ள உள்ளனர்.

நாட்டில் அந்நிய செலாவணி கையிருப்பானது ஆயிரத்து 500 மில்லியன் டொலர்கள் வரை குறைந்துள்ளது. இதில் ஆயிரத்து 100 மில்லியன் மாத்திரமே அமெரிக்க டொலர்கள் என ராஜாங்க அமைச்சர் ஷொயன் சேமசிங்க நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இலங்கையின் இறக்குமதி செலவுகளை கவனத்தில் கொள்ளும்போது, இந்த டொலரானது இரண்டு வார காலத்திற்கே போதுமானது என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: