டெங்கு விரைவு பரிசோதனைக்காக அதிக நிதியை அறவிட்ட ஆய்வு கூடங்களுக்கு அபராதம்!

Friday, March 24th, 2023

நிர்ணய விலையை மீறி டெங்கு விரைவு பரிசோதனை, பூரண குருதி பரிசோதனை என்பவற்றுக்காக அதிக நிதியை அறவிட்ட கொழும்பு பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலை மற்றும் 8 தனியார் ஆய்வு கூடங்களுக்கு எதிராக 55 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபையின் சுற்றி வளைப்பு பிரிவினால் இது தொடர்பான சோதனை நடத்தப்பட்டது.

இதனையடுத்து, 5 தனியார் ஆய்வு கூடங்கள் தொடர்பான சமர்ப்பணங்களை கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றில் நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் முன்வைத்தனர்.

இதன்போது, அந்த குற்றங்களை குறித்த நிறுவனங்கள் ஏற்றுக் கொண்டதை அடுத்து, அந்த நிறுவனங்களுக்கு 35 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மேலும் 3 நிறுவனங்களுக்கு எதிராக கங்கொடவில நீதிவான் நீதிமன்றம் 20 இலட்சம் ரூபா அபராதம் விதித்துள்ளது.

டெங்கு விரைவு பரிசோதனைக்காக ஆயிரத்து 200 ரூபா அறவிடப்பட வேண்டும். எனினும், குறித்த நிறுவனங்களினால் 1500 முதல் 3800 ரூபாவிற்கு இடைப்பட்ட பணம் அறவிடப்பட்டுள்ளது.

அத்துடன், முழுமையான குருதி பரிசோதனைக்காக 400 ரூபா என்ற நிர்ணய விலையை அரசாங்கம் நிர்ணயித்துள்ளது.

அதனை மீறி குறித்த நிறுவனங்கள் 480 ரூபா முதல் ஆயிரம் ரூபா வரை அறவிட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: