டெங்கு நோய் பரவல் 30 வீதத்தால் அதிகரிப்பு – தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு கடும் எச்சரிக்கை!
Saturday, October 14th, 2023டெங்கு நோய் பரவல் 30 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, ஒக்டோபர் 2 ஆம் திகதிமுதல் 8ஆம் திகதி வரையான 40ஆவது வாரத்தில் 684 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இதேநேரம் 39 ஆவது வாரத்தில் 526 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
அதன்படி, 39 ஆவது வாரத்துடன் ஒப்பிடுகையில் 40 ஆவது வாரத்தில் குறித்த நோயாளர்களின் எண்ணிக்கை 30 வீதத்தால் அதிகரித்துள்ளது.
இதேவேளை, குறித்த காலப்பகுதியில் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 146 டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பதிவாகியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 48.2 வீதமானோர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர்.
இந்நிலையில், பிலியந்தலை ,மொறட்டுவை , அத்தனைகல்ல , களனி , தொம்பே , இராகம , கம்பளை , உடுநுவர , மாத்தளை , பதுளை உள்ளிட்ட 16 பிரிவுகளில் டெங்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டின் ஆரம்பம்முதல் இதுவரையில் 65 ஆயிரத்து 479 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடிக்குமெனின் அது டெங்கு காய்ச்சலாக இருக்கலாம் எனவும் அவ்வாறான சந்தர்ப்பங்களில் உடனடியாக வைத்தியரை நாடுமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், நுளம்புகள் பெருகாதவாறு சூழலை பேணுவதன் மூலம் டெங்கு நுளம்புகள் பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியும் எனவும் இதனால் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|