டெங்கு நுளம்புகளை கண்டறிய பொலிஸ் மோப்ப நாய்கள் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!

Wednesday, August 4th, 2021

நீர் தேங்கியுள்ள பகுதிகளில் டெங்கு நுளம்பு பெருக்கம் காணப்படுகிறதா என்பதை இனங்காண்பதற்காக  மோப்ப நாய்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டுள்ளது. கண்டி பொலிஸ் மோப்ப நாய் பிரிவிலுள்ள ஜொனி மற்றும் ரொமா என்ற மோப்ப நாய்கள் பயிற்றுவிக்கப்பட்டதன் பின்னர் வெற்றிகரமாக நுளம்பு காணப்படும் இடங்களை இனங்கண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

எதிர்வரும் காலங்களில் டெங்கு ஒழிப்பு தொடர்பில் சுகாதார தரப்பினரால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளிலும் இந்த மோப்ப நாய்களைப் பயன்படுத்த எதிர்பார்க்கப்படுவதாகவும்  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

இலங்கை பொலிஸாரால் நீண்ட காலமாக விசாரணை நடவடிக்கைகளில் மோப்ப நாய்கள் உபயோகிக்கப்படுகின்றன. இலங்கை பொலிஸிலுள்ள சுமார் 200 மோப்ப நாய்களால் பெருமளவான விசாரணைகளின் போது நன்மைகள் கிடைக்கப் பெற்றுள்ளன. குறிப்பாக குற்ற விசாரணை, சந்தேகநபர்களை இனங்காணல், வெடிபொருட்களை இனங்காணல், போதைப்பொருட்கள் காணப்படுகின்ற இடங்களை இனங்காணல் உள்ளிட்ட வெவ்வேறு செயற்பாடுகளில் மோப்ப நாய்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுகிறது.

சில பிரதேசங்களில் பெரும்பாலான பகுதிகள் தூய்மையற்றவையாகக் காணப்படுவதால் நுளம்பு பெருக்கம் உள்ளிட்டவை அதிகரித்துள்ளன. எனவே நீர் தேங்கியுள்ள பகுதிகளில் நுளம்பு பெருக்கம் காணப்படுகிறதா என்பதை இனங்காண்பதற்காக பொலிஸ் மோப்ப நாய்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டது.

குறிப்பாக கண்டி பொலிஸ் மோப்ப நாய் பிரிவிலுள்ள ஜொனி மற்றும் ரொமா என்ற மோப்ப நாய்கள் இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டன. பயிற்றுவிக்கப்பட்டதன் பின்னர் குறித்த இரு மோப்ப நாய்களும் வெற்றிகரமாக நுளம்பு காணப்படும் இடங்களை இனங்கண்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: