டெங்குவை விரட்ட மாற்றுவியூகம் அமைக்குமாறு மக்கள் கோரிக்கை!

Friday, January 12th, 2018

இலங்கையில் டெங்கு நோய்த் தாக்கத்தில் மாவட்ட ரீதியில் இரண்டாவது இடத்தை யாழ்ப்பாணம் பிடித்துள்ளது. வடக்கு மாகாணத்தில் முதல் நிலையில் உள்ளது.

யாழ்ப்பாணக் குடாநாட்டின் இந்த நிலை அனைவரிடத்திலும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்டுப்பாட்டு வாரம், டெங்கு ஒழிப்புச் செயல்திட்டம் என்று பல நடவடிக்கைகள் எடுக்கும் சுகாதார அதிகாரிகள் மற்றும் மாற்று வியூகங்களை அமைத்து டெங்கு நுளம்பை மாநாட்டில் இருந்து விரட்ட வேண்டும் என்று மக்கள் கேட்டுக் கொண்டனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பகுதியினரால் டெங்கு நோய்த் தொற்று தொடர்பான புள்ளிவிவரங்கள் வாராந்தம் வெளியிடப்படுகின்றன. அந்தப் புள்ளிவிவரங்களின்படி நடப்பாண்டில் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் இலங்கை முழுவதும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களுடைய புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த விவரங்களின்படி டெங்கு நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்கள் அதிகமுள்ள இரண்டாவது மாவட்டமாக யாழ்ப்பாணம் இனம் காணப்பட்டுள்;ளது. முதலாவது மாவட்டமாக கொழும்பு உள்ளது.

கடந்த வருடம் ஜனவரி மாதம் முழுவதும் யாழ்ப்பாணக் குடாநாட்டில் 625 பேரே டெங்கு நோய்க்கு இலக்காகியிருந்தனர். நடப்பாண்டில் முதல் வாரத்திலேயே 113 பேர் யாழ்ப்பாணத்தில் டெங்கு நோய்க்கு இலக்காகியுள்ளனர். யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள், சாவகச்சேரி, சங்கானை போன்ற பகுதிகளில் அதிகமானவர்கள் டெங்குவுக்கு இலக்காகியுள்ளனர். வடக்கு மாகாணத்தில் வன்னிப் பெருநிலப்பரப்பில் உள்ள மாவட்டங்களில் மொத்தமாகவே 17 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அவற்றுடன் ஒப்பிடும்போது யாழ்ப்பாணத்தின் டெங்கு நோய்ப் பரவல் பல மடங்கு அதிகரித்ததாகவே காணப்படுகிறது. கிளிநொச்சியில் 9 பேரும், முல்லைத்தீவில் 4 பேரும், வவுனியாவில் 4 பேரும் டெங்குவுக்கு இலக்காகியுள்ளனர்.

மன்னாரில் எவரும் பாதிக்கப்படவில்லை என்று அந்தப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.யாழ்ப்பாணக் குடாநாடும் கொழும்பு போன்ற ஒரு நிலைக்கு தள்ளப்பட்டுவிடக் கூடாது என்று இங்குள்ள சுகாதார மருத்துவ அதிகாரிகள் செயற்படும் போதும், டெங்கு நோய் குறைந்ததாக இல்லை. சனத்தொகைப் பரம்பல் அதிகரித்துக் காணப்படுவது காரணம் என்று கூறப்படுகின்றது.

Related posts: