டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நவீன இலங்கையை கட்டியெழுப்ப எனது தலைமையிலான அரசு அர்ப்பணிப்புடன் உள்ளது – டிஜிட்டல் மயமாக்கலை விரைவுபடுத்த விசேட குழு நியமனம் – ஜனாதிபதி தெரிவிப்பு!

Saturday, April 1st, 2023

டிஜிட்டல் மயமாக்கலின் ஊடாக நவீன இலங்கையை கட்டியெழுப்ப தனது தலைமையிலான அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அரச துறையை டிஜிட்டல் மயமாக்குவதும், டிஜிட்டல் மயமாக்கலை துரிதப்படுத்துவதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும். அதற்காக அமைச்சரவைக் குழுவொன்று நியமிக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அலரிமாளிகையில் நேற்று (30) பிற்பகல் நடைபெற்ற “DIGIECON 2030” வெளியீட்டு விழாவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சியை தொழில்நுட்ப அமைச்சு ஏற்பாடு செய்திருந்தது..

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க –

சர்வதேச நாணய நிதியத்தின் மறுசீரமைப்புகள் எமக்கு அவிருத்திக்கான ஆரம்பத்தை தந்துள்ளன. அவற்றை நாம் பற்றிக்கொள்ள வேண்டும். அதேபோல் நூற்றாண்டுக்கு பொருத்தமான உயர் போட்டித் தன்மை மிகு சந்தைப் பொருளாதாரத்தை நாம் திட்டமிட வேண்டும்.

உயர் போட்டித் தன்மை என்பது சகலதுறைகளுடனுமான போட்டித்தன்மை அல்ல. நம்மால் அவ்வாறு செய்யவும் முடியாது. இருப்பினும் நம்மால் போட்டித்தன்மையை பேணக்கூடிய துறைகள் உள்ளன..

அதிக போட்டித் தன்மை கொண்டதாகவும் பசுமை பொருளாதாரமாக மற்றும் டிஜிட்டல் பொருளாதாரமாகவும் அமைந்திருக்க வேண்டியது அவசியமாகும். இந்த பாதையே எமக்கு பொருத்தமானதாகும். மேற்படி இரு துறைகளும் ஒன்றாக இணைவது அவசியம் என்பதோடு பின்னர் அவை இரண்டும் போட்டித் தன்மை மிகுந்த துறைகளாக மாற வேண்டும்.

டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி நகர்வதற்கு இதுவரையில் தயாரிக்கப்படாமல் இருக்கின்ற பொருளாதார கொள்கையையும் நாம் தயாரிக்க வேண்டியது அவசியமாகும். அது தொடர்பிலான பல்வேறு கருத்துக்களும் யோசனைகளும் காணப்பட்ட போதிலும் மேற்படி துறைக்கு சமீபமான விதத்திலேயே அவற்றை செயற்படுத்த வேண்டும். அத்தோடு அரசாங்க நிதியை கொண்டு டிஜிட்டல் பொருளாதாரத்தை செயற்படுத்த முடியாது என்பதால் தனியார் துறையே அதனை மேற்கொள்ள வேண்டும்.

அதற்குத் தடையாக அரசாங்கம் நிற்கப்போவதில்லை என்பதோடு அதற்கான ஊக்குவிப்பையும் வழங்கும். அதுவே எமது கொள்கையாகும். அதற்கமைய செயற்கை நுண்ணறிவு உள்ளடக்கிய டிஜிட்டல் கொள்கையை நடைமுறைப்படுத்துவதே எமது கொள்கையாகும். அதனை செயற்படுத்துவதற்கு அவசியமான மனித வளத்தை முதலில் மேம்படுத்த வேண்டும்.

அரசாங்கம் அதற்கான முதலீடுகளை மேற்கொள்ளும் போது அதற்கான மனித வளமும் மேம்படும். இதனையே தனியார்துறை செய்ய வேண்டியுள்ளதுடன் நாம் தற்போதும் அதற்கான நிதியை வழங்குகின்றோம்.

டிஜிட்டல் துறையை முழுமையாக நோக்கும் போது, அமெரிக்காவும் சீனாவுமே பலவான்களாக உள்ளனர். ஐக்கிய அமெரிக்காவை போன்று சீனாவும் இத்துறையை சந்தை வாயிலாகவே கையாளுகிறது. சீனாவின் சகல அபிவிருத்திகளும் சந்தை வாயிலாகவே இடம்பெற்றிருப்பதால் டிஜிட்டல் கொள்கை அரசாங்கத்தை மையப்படுத்தியதாக அமைந்திருக்க வேண்டும் என நாம் கருத முடியாது.

ஆனால் அரச துறைகளை டிஜிட்டல் மயமாக்கி அதன் பணிகளையும் துரிதப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். அரச துறைகளின் டிஜிட்டல் மயமாக்களை துரிதப்படுத்துவதற்காக அமைச்சரவை குழுவொன்றை நியமிக்க நாம் திட்டமிட்டுள்ளோம். அந்த நடவடிக்கைகள் உங்களது டிஜிட்டல் மயமாக்க முயற்சிகளையும் துரிதப்படுத்த உதவும்.

இதற்காக எம்மால் நீண்ட காலத்தை செலவிட முடியாது. இந்த தருணத்தில் எமது அண்டை நாடுகளுடன் நெருங்கிய தொடர்புகளை பேண வேண்டியது அவசியமாகும். இத்துறை மிக வேகமாக வளர்ச்சி கண்டிருக்கும். இந்தியாவுடனும் குறிப்பாக தென் இந்தியாவுடனும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ரீதியில் மிக நெருக்கமாக செயற்பட நான் தயாராக உள்ளேன். இதுவே இலங்கை டிஜிட்டல் மயமாக்கல் கொள்கையாக காணப்படுகிறது.

இத்துறைக்கு அவசியமான உட்கட்டமைப்பு வசதிகளை தொடர்ச்சியாக வழங்கும் இயலுமை அரசாங்கத்திடம் இல்லை என்பதால் அவற்றை தனியார் துறையே வழங்க வேண்டும். தனியார் துறை உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கும் போது அரசாங்கம் அதனை ஊக்குவிக்கும். இவ்வாறான காரணத்திற்காகவே ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கான நிதி வழங்கும் இயலுமை எம்மிடத்தில் இல்லை.

இது தொடர்பில் எமக்கு அவசியமான வெளிநாட்டு முதலீடுகள் ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் அதனுடன் இணைந்த ஏனைய நிறுவனங்களுக்கு கிடைப்பதற்கு இடமளியுங்கள். இவ்வாறாகவே அரச டிஜிட்டல் கொள்கைக்கான திட்டமிடல்களை நாம் மேற்கொண்டு வருகின்றோம். இது தொடர்பான விடயங்களை உங்களுக்கு தெரியப்படுத்துவது அரசாங்கத்தின் கடமை என்பதுடன் இந்த விடயத்தில் நீங்கள் அரசாங்கத்துடனோ அல்லது அரசாங்கம் உங்களுடனோ இணைந்து செயற்பட வேண்டியது அவசியமாகும்.

அனைத்து தொழில்நுட்பங்களும் இலங்கையில் பரீட்சித்து பார்க்கப்படுவதால் இந்த கொள்கை தயாரிப்பு தகவல் தொழில்நுட்ப துறை மீதே தங்கியுள்ளது. தொழில்நுட்பத்திற்கான தொழிற்சாலைகளை ஆதாரமாக கொண்ட புதிய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டிய அவசியம் எமக்கு உள்ளது.

விவசாயம், மீன்பிடித்துறை, உற்பத்திச் சேவைகள் போன்ற துறைகள் இன்னும் 20 வருடங்களில் நீங்களும் நாங்களும் இன்று காண்கின்ற நிலையை விடவும் பாரிய மாற்றங்களைக் கொண்டதாக இருக்கலாம். இவற்றில் இந்தியா வளர்ச்சி காணும் போது தெற்காசியாவிலும் அவை உள்நுழையும்.

நாம் செய்ய எதிர்பார்கின்றவற்றை நான் கூறுகிறேன். எமக்கு தற்போது அமைச்சரவை குழுவொன்றும் உள்ளது. தற்போது நாம் நம்மால் இலகுவாக அபிவிருத்தி செய்யக்கூடிய துறைகள் பற்றியே அவதானம் செலுத்த வேண்டும். செயற்கை நுண்ணறிவு அவ்வாறதொரு துறையாகும். செயற்கை நுண்ணறிவு என்பது என்ன? அது எவ்வாறு மனதுடன் தொடர்புபடுகிறது. இங்குள்ளவர்கள் பௌத்தர்கள் என்பதால் இது மிகவும் வழக்கமான தலைப்பாகும்.

நான், பிரதமர் மற்றும் ஏனைய அமைச்சர்களுடன் இணைந்து, இந்த அரசாங்கம் ஒட்டுமொத்த நாட்டையும் நவீனமயப்படுத்துவதில் உறுதியாக உள்ளோம். அரசாங்கம் தனியார் துறையுடன் இணைந்து, டிஜிட்டல் மயமாக்கலில் இலங்கையை பிராந்தியத்தில் முன்னணி நாடாக மாற்றுவோம் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடலைத் தொடங்க அமைச்சரவை அங்கீகாரம் - அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவ...
சிரேஷ்ட பிரஜைகளின் ரூ. 100,000 இற்கு குறைந்த நிலையான வைப்பு வட்டி வருமானத்தின் வரி நீக்கம் - நிதி இர...
இவ்வாண்’டு 20 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைதருவர் - 06 பில்லியன் அமெரிக்க டொலர் வருமா...