டிஜிட்டல் பொருளாதார முறை தெரிவு மாத்திரமல்ல அது அத்தியாவசியமான தேவை” ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து!

Saturday, November 4th, 2023

“இலங்கைக்கு டிஜிட்டல் பொருளாதார முறை தெரிவு மாத்திரமல்ல அது அத்தியாவசியமான தேவை” எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

இந்த நடவடிக்கையை முன்னெடுப்பதன் முதல்கட்டமாக கல்வித்துறையில் மனித வளத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று(3) நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் – ஒரு நாடாக தொழில்நுட்பத் துறையில் முன்னேற்றம் அடைய சிறிது காலம் தேவைப்படுவதாகவும், கல்வி மற்றும் சந்தை மூலோபாயம் ஆகிய துறைகளில் உள்ள சவால்களுக்கு ஈடுகொடுப்பதற்கான ஆதரவை வழங்குமாறும் ரணில் விக்ரமசிங்க பங்குதாரர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

டிஜிட்டல் மயமாக்கலை பாடசாலைகளில் முன்னெடுக்கும் போது, ஆசிரியர்களை பயிற்றுவிப்பதற்காக அரச மற்றும் தனியார் துறைகளின் கூட்டு முயற்சி அவசியமெனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

அத்துடன், தொழில்நுட்ப மற்றும் பட்டம் பெற்றதன் பின்னரும், பாடசாலைக்குப் பின்னரான காலத்திலும் பயிற்சி வாய்ப்புகளை உருவாக்குவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலாப நோக்குடன் அல்லது இலாப நோக்கம் இன்றி தொழில்பயிற்சி பிரிவினர் குறிப்பிட்ட பங்களிப்பை வழங்க வேண்டும் எனவும், பயிற்சி தொழிலாளர்களின் கேள்விக்கமைய அதற்கு அவசியமான நிறுவனங்களை நிறுவ எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், டிஜிட்டல் பொருளாதாரத்தின் மூலம் 16 பில்லியன் டொலர் சந்தை இலக்கை அடைய வேண்டியதன் முக்கியத்துவத்தை அறிந்து, சந்தை பிரவேசம் தொடர்பில் ஆழமாக சிந்தித்து, திட்டங்களை செயற்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: