ஜெனீவா கூட்டத் தொடருக்கு முகங்கொடுக்க தயாராகும் இலங்கை – நீதி மற்றும் வெளிவிவகார அமைச்சர்கள் தலைமையில் விசேட கலந்துரையாடல்!

Thursday, August 11th, 2022

ஐக்கிய நாடுகளின் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடருக்கு முகம் கொடுக்கும் வகையில் இலங்கை சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையை தயாரிக்கும் நடவடிக்கையை இலங்கை ஆரம்பித்துள்ளது.

நீதி மற்றும் சிறைச்சாலைகள், மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜேயதாச ராஜபக்ஷ தலைமையில் நீதி அமைச்சில் இது தொடர்பான விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.

மனித உரிமைகள் நல்லிணக்கம் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளை கையாளும் தேசிய நிறுவனங்களின் நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பாக ஆராயும் இவ் விசேட கலந்துரையாடலில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியும் கலந்து கொண்டார்.

மனித உரிமைகளை பாதுகாப்பது, நல்லெண்ணத்தை உருவாக்குவது மற்றும் கட்டியெழுப்புவது தொடர்பாக அந்நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பாக இங்கு விடயங்கள் முன்வைக்கப்பட்டதோடு எதிர்காலத்தில் அந்நிறுவனம் செயற்பட வேண்டிய விதம் தொடர்பாகவும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடருக்கு இது தொடர்பான அனைத்து நிறுவனங்களும் எவ்வாறு முகம் கொடுப்பது என்பதற்கான பொறிமுறையொன்றை தயாரிக்கவும் இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: