ஜீ.ஜீ. பொன்னம்பலத்தை புலிகள் அச்சுறுத்திய போது நாங்கள் பாதுகாப்புக் கொடுத்ததை மறந்தது ஏன் கஜேந்திரகுமாரிடம் சிவாஜிலிங்கம் கேள்வி
Friday, August 3rd, 2018கடந்த மாகாண சபை தேர்தலில் துரோகி இயக்கங்களான ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப். புளோட் அமைப்புகளால் முதலமைச்சராகிய சி.வி.விக்னேஸ்வரனை கஜேந்திரகுமார் மாற்றுத் தலைமையாகத் தத்தெடுப்பது குறித்து பதிலளிக்க வேண்டுமெனவும் இது குறித்து நேரடி விவாதத்துக்கு வருமாறும் எம்.கே.சிவாஜிலிங்கம் கோரியுள்ளார்.
மேற்படி விடயம் தொடர்பில் அவர் கருத்து வெளியிடுகையில் –
அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் 35 வருட ஆயுத போராட்டத்தில் விடுதலைப் புலிகளே இறுதி வரை போராடியதாகவும் ஏனைய இயக்கங்கள் எல்லாம் காட்டிக்கொடுப்பு செய்தவையெனவும் தெரிவித்துள்ளார். அவரது கருத்தையிட்டு நான் ஆச்சரியம் அடைந்துள்ளேன்.
ஏனெனில் 2001 ஒக்ரோபர் மாதத்தில் தோற்றுவிக்கப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகியன அங்கம் வகித்திருந்தன. அப்போது அந்த இயக்கங்கள் உள்ள அமைப்பில் அவர் இணைந்து செயற்பட்டமை பாராளுமன்றம் செல்லும் வசதி கருதியா என்ற கேள்வியெழுகின்றது.
2002 ஏப்ரல் 12 ஆம் திகதி கூட்டமைப்பின் 15 உறுப்பினர்களில் தலைவர் சிவசிதம்பரத்தை தவிர ஏனையவர்கள் வன்னியில் பிரபாகரனை சந்தித்தனர்.
இதில் பாராளுமன்ற உறுப்பினராக சுரே~; இல்லாத போதும் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தார். இதில் விடுதலைப்புலிகளின் உயர் மட்ட தலைவர்கள் கலந்து கொண்டிருந்தனர். அப்போது கஜேந்திரகுமார் காட்டிக்கொடுத்த விடயத்தை மறந்திருந்தாரா என கேட்கின்றேன்.
இந்த சந்திப்பு வேளையில் சுரேஷ் எழுப்பிய கேள்விக்கு பிரபாகரன் தமிழர் விடுதலை கூட்டணி நீண்ட வரலாற்றைக் கொண்ட கட்சி அதுபோல ரெலோவுக்கும் நீண்ட வரலாறு உள்ளது. இதைபோன்று ஏனைய இயக்கங்களுக்கும் உள்ளது என சொன்னதை மறந்து விட்டீர்களா என வினவுகின்றேன்.
2004 பொது தேர்தலுக்கு வேட்பாளர் பட்டியல் விடுதலைப்புலிகளுடன் சேர்ந்து தயாரித்த போது ஈ.பி.ஆர்.எல்.எவ் ரெலோ காட்டிக்கொடுத்த இயக்கம் குறித்த பேச்சினை ஏன் எழுப்பவில்லை.
2001 முதல் 2010 வரை ஒரே கூட்டில் இருந்துவிட்டு இப்போது காட்டிக்கொடுத்த இயக்கங்கள் எனகூறுவது விரக்தியின் உச்சமா அல்லது வேறு ஏதேனும் விடயமா என சொல்ல வேண்டும்.
கஜேந்திரகுமாருக்கு இன்னுமொரு விடயத்தையும் ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது.
1990 களில் உங்களது தந்தையார் விடுதலைப்புலிகளால் தனக்கு அச்சுறுத்தல் உள்ளது. தனக்கு பாதுகாப்பு வேண்டுமென நட்புறவின் அடிப்படையில் ரெலோ மற்றும் புளோட் அமைப்பிடம் கேட்டிருந்தார்.
இதன்பிரகாரம் அவரது வீட்டுக்கு சில வாரம் இரவு வேளையிலும் மற்றும் நாட்களில் 24 மணி நேரமும் இளைஞர்கள் ஆயுதத்துடன் நிறுத்தப்பட்டனர். ரெலோவின் தலைவர் ஜனா கருணாகரம் மற்றும் புளோட்டின் தலைவர் சித்தார்த்தனாலும் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
இவ்வாறு பாதுகாப்புக்குச் சென்ற இளைஞர்களை அப்போது சிறுவனாக இருந்த கஜேந்திரகுமார் துடுப்பாட்டத்துக்கு பந்து போடுமாறு வற்புறுத்தியதை அவர் மறந்திருக்க மாட்டார் என எண்ணுகின்றேன். இவ்வாறான நிலையில் திடீரென முழித்தவர் போல் கதை கூறுவதையிட்டு ஆச்சரியமடைந்தேன்.
கடந்த மாகாண சபை தேர்தலில் ரெலோ ஈ.பி.ஆர்.எல்.எவ் புளோட் தமிழரசு கட்சி ஆதரவில் வெற்றி பெற்ற முதலமைச்சர் விக்னேஸ்வரனை மாற்றுத் தலைமையாக கஜேந்திரகுமார் தத்தெடுக்க முயல்கிறார்.
உங்கள் பாஷையில் சொல்வதானால் துரோகி இயக்கத்தால் உருவாக்கப்பட்ட முதலமைச்சரை மாற்றுத் தலைவராக தத்தெடுப்பது குறித்து கஜேந்திரன் பதிலளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|