ஜீ.எஸ்.பி வரிச்சலுகை வழங்குவது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை – ஐ.நா!

ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்குவது குறித்து இறுதித் தீர்மானம் எதுவும் இதுவரையில் எடுக்கப்படவில்லை என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகை சில நாட்களில் இலங்கைக்கு கிடைக்கும் என அண்மையில் பகிரங்கமாக அறிவித்திருந்தார்.பிரதமர் மற்றும் ஆளும் கட்சி அமைச்சர்களும் இந்த விடயம் தொடர்பான கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.
எனினும், இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்குவது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
மனித உரிமை நிலைமைகள் தொழிலாளர் உரிமைகள் உள்ளிட்ட 27 சர்வதேச பிரகடனங்களின் அடிப்படையில் இலங்கையின் நல்லாட்சி அரசாங்கம் செயற்பட்டு வருவதனால் வரிச்சலுகைத் திட்டத்தை மீளவும் வழங்க முடியும் என அண்மையில் ஐரோப்பிய ஆணைக்குழு பரிந்துரை செய்திருந்தது.
எனினும், இந்தப் பரிந்துரையானது இறுதித் தீர்மானமாக அமையாது என சுட்டிக்காட்டப்படுகின்றது. ஐரோப்பிய நாடாளுமன்றமும் ஐரோப்பிய ஆணைக்குழுவும் வரிச்சலுகைத் திட்டம் வழங்குவது குறித்து தீர்மானிக்க வேண்டியுள்ளது.
இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை திட்டம் வழங்குவது குறித்து அறிவிப்பதற்கு இன்னும் சில மாதங்கள் செல்லலாம் என தெரிவிக்கப்படுகிறது.குறைந்த பட்சம் மார்ச் மாதம் 12 ஆம் திகதி வரையில் இலங்கை இது தொடர்பிலான அறிவிப்பிற்காக காத்திருக்க வேண்டியிருக்கும்.
மார்ச் மாதம் 12ஆம் திகதி முதல் மே மாதம் 12ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் வரிச்சலுகை வழங்குவது குறித்து உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது.
நாடு ஒன்றுக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கப்படுவதன் மூலம் அந்த நாடு 27 சர்வதேச பிரகடனங்களையும் திருப்திகரமாக அமுல்படுத்துகின்றது என பூரணமாக அர்த்தப்படாது என அண்மையில் ஐரோப்பிய ஆணைக்குழு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. வரிச் சலுகைத் திட்டத்தை வழங்கி அந்த நாட்டை ஊக்குவித்து முழு அளவில் பிரகடனங்களை அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை வரிச்சலுகை கிடைத்து விட்டதாக ஆளும் கட்சி பிரச்சாரம் செய்து வருகின்ற நிலையில் நாட்டின் இறைமையைக் காட்டிக் கொடுத்து சமஸ்டி முறையை வழங்குவதாக உறுதியளித்து வரிச்சலுகைத் திட்டத்தை பெற்றுக் கொண்டுள்ளதாக மஹிந்த தரப்பினர் குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|