ஜனாதிபதி ரணில், நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச அமைச்சரவை பத்திரம் – வேட்பாளர்களின் வைப்பு தொகையை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி!

Sunday, April 14th, 2024

இலங்கையில் இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், வேட்பாளர்களின் வைப்பு தொகையை அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு செப்டம்பர் முதல் நவம்பர் வரை காலப்பகுதிக்குள் ஜனாதிபதி தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது.

இந்நிலையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களின் வைப்புத்தொகையை அதிகரிப்பதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச ஆகியோர் இணைந்து இந்த அமைச்சரவை பத்திரத்தை தாக்கல் செய்திருந்தனர்.

தற்போதைய சமூக, பொருளாதார மற்றும் அரசியல் சூழலில், ஜனாதிபதி தேர்தல் சட்டம், நாடாளுமன்ற தேர்தல் சட்டம் மற்றும் மாகாண சபை தேர்தல்கள் சட்டம் ஆகியவற்றின் ஏற்பாட்டின் படி தற்போதுள்ள வைப்பு தொகை வரம்புகளை புதுப்பிப்பது பொருத்தமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஜனாதிபதித் தேர்தலுக்கு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளரின் வைப்புத் தொகை 75,000 ரூபாவிலிருந்து 2.6 மில்லியன் ரூபாவாகவும், சுயேச்சை வேட்பாளரின் வைப்புத் தொகை 50,000 ரூபாவில் இருந்து 3.1 மில்லியன் ரூபாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளரின் வைப்புத் தொகை 2,000 ரூபாயில் இருந்து 11,000 ரூபாயாகவும், சுயேச்சை வேட்பாளரின் வைப்புத் தொகை 2,000 இலங்கை ரூபாவில் இருந்து 16,000 ரூபாயாகவும் அதிகரிக்கப்படவுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு, ஒரு கட்சி வேட்பாளர் 6,000 ரூபாவையும், சுயேச்சை வேட்பாளர் 11,000 ரூபாவையும் வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும்.

இதேவேளை முன்மொழியப்பட்ட பாதுகாப்பு வைப்பு விகித அதிகரிப்பு குறித்து கருத்து தெரிவித்த தேர்தல் கண்காணிப்பு குழுக்கள், தேவையான சட்ட மாற்றங்களுக்கு கால அவகாசம் தேவை என்பதால், அடுத்த தேர்தல் வரை இந்த மாற்றங்கள் நடைமுறைக்கு வராது என்று கூறியுள்ளன.

பல தசாப்தங்களில் ஏற்பட்ட மிக மோசமான நிதி நெருக்கடியின் பின்விளைவுகளை இலங்கை எதிர்கொண்டுள்ளது. இந்தப் பின்னணியில் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் வைப்பு தொகை அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

00

Related posts: